தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை – கமல் குணரத்ன

Defence Ministry Secretary Rtd Major Kamal Gunaratne
Defence Ministry Secretary Rtd Major Kamal Gunaratne

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

“பொருளாதாரத்திற்கு பங்களிப்பது மற்றும் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பன தவிர மிக முக்கியமாக, இலங்கை படைத்தரப்பில் சேவையாற்றிய வீரர்களைக் கொண்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றன என்று மேலும் தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்பு சேவை வழங்குநர்கள் சங்கத்தின் 2021ம் ஆண்டிற்கான ´வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் நேற்றையதினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பானது தனக்குறியது என சுட்டிக்காட்டிய அவர், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 150,000 ற்கு மேற்பட்ட உறுப்பினர்களும் தேசிய பாதுகாப்பு இயந்திரத்தில் ஒருங்கிணைந்த பங்குதாரர்களாக மாறியுள்ளதை தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், தேசிய பாதுகாப்பினது பெறுபேறுகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்தாலும் அதற்கு பாதுகாப்பு செயலாளர் என்றவகையில் தானே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான கட்டளை, அதிகாரம், பொறுப்பு என்பன தனது தோளிலேயே சுமத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர், கொவிட்-19 தொற்று காரணமாக தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாடு முழுவதும் வளர்ச்சியைக் காட்டும் தொழில்துறையாக இத்துறை மாறிவருவதை அவர் சுட்டிக்காட்டினர்.

பல நோக்கு செயற்பாடுகள் பற்றிய போதுமான அறிவு மற்றும் பாதுகாப்பு சார் செயல்பாடுகளை கையாளும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இந்தத்தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர், பொறுப்புகளை ஏற்கத் தயாராகும் மனித மூலதன முதலீட்டில் அறிவு, திறன் அபிவிருத்தி என்பன மிக முக்கியமான காரணிகளாக அமையும் என தெரிவித்தார்.

குறைவான அனுகூலங்கள், இழப்பீட்டு தொகைகள் வழங்கப்படாமை, முறையான காப்புறுதிக் கொள்கைகள் இன்மை மற்றும் ஊழியர்களுக்கான தொழில் அபிவிருத்தி வழிகாட்டல்கள் இன்மை என்பன இந்த தொழில்துறையை பலவீனப்படுத்துவதற்கான முக்கியக் காரணங்கள் என குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர், சேவைகளின் தரத்தை உறுதிசெய்ய அத்தகைய குறைபாடுகளை குறைப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுத்தல் வழங்கினார்.

தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம், சிறப்புப் பாதுகாப்பு கல்விக்கூடங்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றை நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது எடுத்துரைத்தார்.

“இலங்கையில் உள்ள அனைத்து பாதுகாப்பு சேவை வழங்குநர்களின் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், அரசாங்கத்துடனான அவர்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு ஆகியவை எனது தலைமைத்துவத்தின் கீழ் சில நியதிகளையும், ஒழுங்கு விதிகளையும் அமைத்துள்ளன. தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களை பதிவு செய்யும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும், இந்தத் தொழில்துறையின் நல்லிணக்கம் மற்றும் நிலையான தன்மையைப் பேணுவதற்கும் அனைத்து முகவர் நிலையங்களும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்”, என்றும் கேட்டுக்கொண்டார். 2022 ஆம் ஆண்டு முதல் இணைய அடிப்படையிலான பதிவு முறை உருவாக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை பாதுகாப்பு சேவை வழங்குநர்கள் சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள், அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.