விமர்சனங்கள் ஒருபோதும் பிரிதலுக்கான காரணமாக அமையாது – ரமேஷ் பத்திரண

ramesh pathirana
ramesh pathirana

அரசாங்கத்துடன் வெவ்வேறு கருத்து மோதல்கள் காணப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அரசியல் ரீதியாக கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும், அனைவருடனும் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அண்மைக்காலமாக ஆளுந்தரப்பின் பிரதான கட்சிக்கும் பங்காளி கட்சிகளுக்குமிடையிலான கருத்து முரண்பாடுகள், பிளவுகள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. யுகதனவி உள்ளிட்ட ஒப்பந்த விவகாரங்களின் போது ஆளுந்தரப்பில் பங்காளி கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் பகிரங்க மேடைகளில் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அது மாத்திரமின்றி எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதற்கான புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது , ‘சு.க. அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இழக்கப்படுவதோடு , அது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதகமாக அமைந்துவிடுமல்லவா?’ என்று கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும் , அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவார்கள் என்று நாம் எண்ணவில்லை. எவ்வாறிருப்பினும் அவர்களுடன் கருத்து வேறுபாடுகளும் , வெவ்வேறு நிலைப்பாடுகளும் காணப்படலாம். அவற்றை முன்வைப்பதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு காணப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் காணப்படுகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துப்படுத்தும் அமைச்சர்கள் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவர்கள் மிகுந்த நட்புறவுடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். ஏனைய அமைச்சர்களும் அதே போன்று தான் செயற்படுகின்றனர்.

அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் , அனைவருடனும் ஒன்றிணைந்து எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.