நுரைச்சோலை அனல்மின் நிலையம்: செயலிழந்த மின்னுற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

8e6aa689 norochchola power plant 850x460 acf cropped
8e6aa689 norochchola power plant 850x460 acf cropped

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயலிழந்திருந்த மின்னுற்பத்தி இயந்திரம் இன்று(30)முதல் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

இதற்கமைய தேசிய மின் கட்டமைப்பில் 300 மொகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் டீசல் என்பன வழங்கப்பட்டுள்ள நிலையில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற்பாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய தேவை இருக்காது என மின்சாரத்துறை தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளைக் கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, தேவை ஏற்படின் தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான யோசனை நாளை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்தும் மின்சார சபைக்கு நேரடியாக டீசல் மற்றும் எண்ணெய் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் ஐ.ஓ.சியிடம் இருந்து எண்ணெய்யைப் பெற்றுக் கொள்ள முடியும்.

துண்டிப்பின்றி மின்சார விநியோகத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனல் மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளமையினால் நாளைய தினம் வரையில் மின்சாரத்தைத் துண்டிப்பதற்கு அனுமதியளிக்க முடியாதென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது