வனவளத்திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

DSC02698
DSC02698

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவள திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

DSC02714

வவுனியா மதுராநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள வனவள திணைக்களத்தினருக்குரிய காணியில் குறித்த பகுதியை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த மக்களின் கால்நடைகள் மேச்சலுக்காக சென்றுவரும் நிலையில் கடந்த சில நாட்களாக வனவளத்திணைக்களத்தினர் குறித்த பகுதிக்குள் கால்நடைகள் வருவதை தடை செய்யும் வகையில் வேலி அமைத்து கால்நடை வளர்ப்பாளர்களையும் அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக தமது கால்நடைகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதிக்குள் காணப்படும் குளத்தின் நீரேந்து பிரதேசத்திலேயே கால்நடைகள் நீரை பருகுவதால் தற்போது அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கிராம மக்கள் தமது கால்நடைகளை மேய்ப்பதற்கான இடத்தினை வேலி போட்டு அடைப்பதனை வனவளத்திணைக்களத்தினர் நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC02759 1


இத்திக்குளம் காட்டு அம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 6 கிராமங்களை சேர்ந்த 2000 கால்நடைகளின் மேச்சல் தரை இல்லாமல் போவதாகவும் தாம் கால்நடை வளர்ப்பை கைவிட்டு கிராமத்தினை விட்டு இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நிலையில் ஊர்வலமாக சுமார் 3 கிலோ மீற்றர் சென்று மதுராநகர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிரச்சனைகளை தெரிவித்தததையடுத்து குறித்த பகுதிக்கு வனவள திணைக்களத்தினரை வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பணித்திருந்தார்.


இதனையடுத்து அங்கு வந்த வனவளத்திணைக்களத்தினரிடம் குறித்த வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக கைவிடுமாறும் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

DSC02732

எனினும் வனவள திணைக்களத்தினர் குறித்த பகுதியில் வனம் உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

எதிர்வரும் புதன்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் வனவளத்திணைக்களத்தினர் கிராம மக்கள் சந்தித்து குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அதுவரை வனவளத்திணைக்களத்தினர் பொதுமக்கள் கால்நடைகளை குறித்த பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த வனவளத்திணைக்களத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் குறித்த பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தனர்.