கட்டுவன் – மயிலிட்டி வீதியை மீள வழங்குமாறு கோரிக்கை

kadduvan road
kadduvan road

கட்டுவன் – மயிலிட்டி இடையிலான சுமார் 400 மீற்றா் வீதியை மீள வழங்குமாறு யாழ்.மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதனின் பணிப்புக்கமைய இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேற்படி வீதியை திறப்பதற்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமையவே இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

“மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையான மயிலிட்டி வடக்கு பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் கட்டுவன் – மயிலிட்டி வீதியின் ஒரு பகுதி பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி பலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டித் துறைமுகத்துக்கான பிரதான வீதியாகக் காணப்படுகிறது.

அதனால் பெரும்பாலான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் பிரதான வீதிக்குப் பதிலாக தனியார் காணி ஊடான மாற்றுப்பாதையால் மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கட்டுவன் சந்தி தொடக்கம் மயிலிட்டிச் சந்திவரையான வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.