அம்பாறையில் திடீரென வீசிய பலத்த காற்று – வீடுகள், கடைகள் சிலவற்றுக்கு பலத்த சேதம்

ampara
ampara

இன்று பகல் அம்பாறை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு ஏறத்தாழ 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் மழையும் தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக வீதியோர கடைகள் சேதமடைந்தததுடன் போக்குவரத்தும் சிறிது தடைப்பட்டது.

மேலும் பொத்துவில் முதல் பெரியநீலாவணை வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2 அல்லது 3 மீட்டர் வரை உயர்வடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அச்சம் காரணமாக மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க செல்லவில்லை. குறிப்பாக கல்முனை பாண்டிருப்பு மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பகுதிகளில் வீசிய காற்றினால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மரங்கள் சிலவும் முறிந்து வீழ்ந்துள்ளன.

அத்துடன் குறித்த காற்று சுமார் 10 நிமிடங்கள் வீசியுள்ளதுடன் சிறிது நேரம் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.