நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்!

rain
rain

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஆரம்பித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகரித்த மழை பெய்யும் என சாத்தியம் நிலவுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை, இன்றைய தினம் மழை பெய்யுமாயின் கிங் மற்றும் நில்வளா கங்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல்வள மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் கலாநிதி செல்வராஜா ஹேமகாந்த் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக ஆறுகளை அண்டி வாழ்பவர்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.