அவன்கார்ட் விவகாரம் : கோத்தபாய உட்பட 8 பேர் விடுவிப்பு!

gotabaya 2
gotabaya 2

அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1,140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை ஆட்சேபித்து கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக புதிதாக வழக்கொன்றினை தாக்கல் செய்த எந்த தடையும் இல்லை என மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.