எரிபொருள் விநியோகத்தின் போது, மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது-தமிழ்த் தேசியக் கட்சி

1656216015 tna 2
1656216015 tna 2

கிளிநொச்சியில், சுகாதாரப் பணியாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தின் போது, மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீ காந்தா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் தமது கடமைக்கு ஒழுங்காகவும், உரிய நேரத்திலும் சமூகம் அளிப்பது மிகவும் அவசியமானது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. இருந்தும், இந்த உண்மையை உணர்ந்து கொள்ள மறுக்கும் நபர்கள் சிலர், அங்கும் இங்குமாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பது அப்பட்டமான சமூக விரோத நடவடிக்கை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியே ஆக வேண்டும்.

ஒரு சிலரின் அடாவடித்தனமான செயற்பாடுகளால், வடக்கில் சுகாதார பணியாளர்கள் ஒரு சில மணித்தியாளயங்கள் கூட, தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கி, சுகாதார சேவை செயல் இழக்குமானால், வைத்தியசாலைகளை நாடி நிற்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி நேயாளிகளின் கதி, இன்றைய நெருக்கடி நிலையில் என்னாகும் என்பதை இத்தகைய நபர்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், இப்போதெல்லாம் எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் ஒழுங்கீனங்களை தட்டிக் கேட்க சகலருக்கும் உரிமை உண்டு என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. ஆனால், முன்கூட்டியே பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோக ஏற்பாடுகளில் எவரும் தலையிட்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கிளிநொச்சியில் அரங்கேறிய சம்பவம் போன்ற நிலைமைகள் எங்கே ஏற்பட்டாலும், அந்த இடங்களில் இருக்கக் கூடிய இளைஞர்கள் சமூகப் பொறுப்புடன் துணிந்து செயற்பட்டு, அடாவடித்தனத்தை முளையிலேயே கிள்ளி எறிய ஒருபோதும் தயங்கக் கூடாது. சட்டம் கூட அதனை அனுமதிக்கின்றது.

கிளிநொச்சி சம்பவத்திற்காக, அதில் பாதிக்கப்பட்ட சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு எமது மனவருத்தத்தை நாம் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவை வழங்க தீர்மானித்திருக்கின்றோம் என்றுள்ளது.