அரசியல் கைதிகளின் தேவைகளை அறிவாரில்லை-அருட்தந்தை மா.சத்திவேல்

IMG 20220622 WA0264
IMG 20220622 WA0264

அரசியல் கைதிகளின் பல பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களின் தேவைகளை அறிவாரில்லை இவை பேரினவாத சமூக சித்திரவதையையே காட்டி நிற்கின்றதென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்த காலப்பகுதியில் சொத்துக்களை இழந்தோர், உடமைகளை இழந்தோர் இன்றும் வறுமையின் பிடிக்குள் இருந்து மீளமுடியாதுள்ளனர். அதுமட்டுமல்ல முடிவுறாது தொடர்கின்றது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம். ஆட்சியாளர்களின் ஏமாற்று நாடகம் சர்வதேச அமைப்புகளின் பாராமுகம், கால இழுத்தடிப்பு உறவுகளின் தாய்மாரை துயரத்தில் தள்ளியுள்ளது. உறவுகளை தேடி தேடியே பலர் கண்ணீரையும், வேதனையையும் சொந்தமாக்கி கொண்டுள்ளதோடு இவர்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி அதனால் நூற்றுக்கு அதிகமானோர் இறப்பை சந்தித்துள்ளனர் .இது இழப்பு என்பதை விட சித்திரவதை கொலை என்றே கூறலாம்.

அரசியல் கைதிகளின் உறவுகள் தங்கள் உறவுகள் எப்போது வீட்டுக்கு திரும்புவர் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளுக்காக ஏங்கும் தாய்மார்கள் ,தகப்பனுக்கு காத்திருக்கும் பிள்ளைகள், கணவனை எதிர்பார்த்திருக்கும் மனைவி, குடும்ப சுமையோடு பிள்ளைகளின் எதிர் காலம் தெரியாதிருக்கும் தாய்மார் வலிகளை மட்டுமே சுமந்து நிற்கின்றனர். அரசியல் கைதிகளின் பல பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களின் தேவைகளை அறிவாரில்லை. இவையெல்லாம் பேரினவாத சமூக சித்திரவதையே.

இவர்களின் வாழ்வு தன்மையை ஒத்ததாகவே யுத்த காலப்பகுதியில் உடல்ரீதியாக பாதிப்புக்குள்ளானவர்கள், உடல் உறுப்புகளை இழந்தோர், அவர்களில் தங்கி வாழ்வோர் நிலையும் உள்ளது. இவையெல்லாம் சித்திரவதையின் வெளிதெரியாமுகம்.

மேலும் சமூக மயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் போராளிகளும் திறந்தவெளி சிறைக்குள்ளே மீண்டும் தள்ளப்பட்ட நிலையில் வாழ்வை தொடர்கின்றனர். படையினரின் உறவை பேண வேண்டும். இதற்கு பலவந்தமாக அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. சுதந்திரமாக செயல்பட நினைப்பவர்கள் புலிகளின் மீளுருவாக்கம் என சிறையில் தள்ளப்பட்டவர்களுமுண்டு. இதனையும் சித்திரவதைக்குள்ளேயே அடக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல விசாரணை காலகட்டங்களில் பல்வேறு வகையிலான சித்திரவதைகளை அனுபவித்து அவற்றை வெளியில் சொல்ல முடியாத முன்னாள் போராளிகளும் கைதிகளும் உள்ளனர். இவர்கள் அனுபவிக்கும் உடல் உபாதைகளும் பாதிப்பும் ஆற்றுப்படுத்த முடியாதவைகளே.

சமூகத்தில் பல்வேறு மட்டத்தில் உள்ளன ஈழத்தமிழர்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பலர் இந்நிலையிலிருந்து மீண்டவர்களாக தோற்றம் கூறினாலும் பாதிக்கப்பட்ட உள்ளத்தோடேயே வாழ்நாளை கழிக்கின்றனர் என்பதே உண்மை.

இவ்விடத்தில் புலம்பெயர் சமூகம் பாரிய பங்களிப்பு உள்ளது என அறிவிக்கும் இனப்படுகொலைக்கும் முகம்கொடுத்த சமூகம் புதிய நிகழ்ச்சி வரைபடத்திற்கு வந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய காலகட்டம் இது இல்லையெனில் உடல் உள பாதிப்பும் சித்திரவதைக்குள்ளான நோய் சமூகமாகவே வாழ வேண்டிய நிலை ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில் கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே?