இந்தியாவினால் டோனியர் விமானம் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

1660551357 Dornier 228 Maritime Patrol Aircraft 2
1660551357 Dornier 228 Maritime Patrol Aircraft 2

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட டோனியர்(Dornier (INDO-228) உளவு விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பெற்றுக்கொண்டார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால்  ஜனாதிபதியிடம் விமானம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் சதீஷ் என் கோர்மடே உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுகிறது.

“பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர் 228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்” என்று உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்நிகழ்வில் தெரிவித்தார். கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் இது கருதப்படுகின்றது.

வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும் என இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.