நாட்டின் பல பாகங்களுக்கு கடும் மழை – பலத்த காற்று

Rainning
Rainning

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் (திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவில்) நிலைகொண்ட ‘மண்டௌஸ்’ சூறாவளி நேற்று இரவு 11.30 நிலவரப்படி 10.6 என் நெட்டாங்கு மற்றும் 82.3ஈ அகலாங்குக்கு அருகில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சூறாவளி இன்று இரவு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை கடந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.