நிராகரிக்கக் கூடாத, போராளிகள் நோக்கிய விக்கியின் அழைப்பு

DSC04607 e1568342497475
DSC04607 e1568342497475

“தமிழ் மக்களுக்கான விடுதலைப் பயணத்தில் பங்குபற்றியிருந்த உங்கள் அனைவரினதும் பங்களிப்பினையும் ஆலோசனைகளையும்  மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் எமது கட்சிக்கு வழங்குமாறு உங்கள் அனைவரிடமும் விநயமுடன் கேட்டுக் கொள்கின்றேன். எச் சந்தர்ப்பத்திலும் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளாத கொள்கைத் தெளிவுடன் பயணித்த உங்களின் வருகை எமது கட்சிக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த எமது இனத்தின் மீட்சிக்கும் வழிகோலும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இந்த வரலாற்று அழைப்பினை உதாசீனம் செய்துவிடமாட்டீர்கள் என நான் நம்புகின்றேன்.” இது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசன் க.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கடந்த 11-09-2019 அன்று புதன் கிழமை மாலை கிளிநொச்சி மாவட்டத்தில் போராளிகளுடனான சந்திப்பில் குறிப்பிட்ட விடயம்.

யுத்தம் முடிவடைந்த கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பிரதான தமிழ் அரசியல் கட்சியினரும் செய்திராத செயலை விக்கினேஸ்வரன் அவர்கள் துணிந்து செய்ய முன்வந்திருக்கிறார். யுத்த காலத்தில் தம் உயிரை துச்சமென மதித்து போராடிய தரப்பினர் தன்னுடன் இருப்பது மாத்திரமல்ல இந்தச் சமூகத்தை தலைமையேற்று நடாத்தவேண்டும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.  

உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார்கள் என்று கூறி போராளிகளின் அரசியல் வருககைக்கு எதிராக இருந்த தரப்பும் போராளிகளின் தியாகங்களைச் சொல்லி புலம்பெயர் தேசங்களில் இருந்து பணம் பெற்று தங்கள் பரம்பரைக் கட்சியை வளர்க்க முயன்ற தரப்பும் இன்று விக்கினேஸ்வரனுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையான அர்ப்பணிப்புள்ள போராளிகளின் அரசியல்பிரவேசம் என்பது தங்களின் அரசியல் வாழ்விற்கான முடிவுரை என்பது இவர்களுக்கு நன்கு தெரியும்.

போராளிகள் அரசியலுக்கு நுழைந்தால் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று  போராளிகளின் குடும்பங்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தப்பட்டது. அந்த அச்சத்தைப் போக்கும் விதமாக “புனர்வாழ்வளிக்கப்பட்டதாக அரசாங்கத்தினரால் அறிவிக்கப்பட்ட எமது போராளிகளாகிய நீங்கள் ஜனநாயக அரசியல் வழி நின்று மக்கள் பணியாற்றுவதில் எந்தச் சட்டரீதியான தடங்கல்களும் இல்லை என்பதை உங்களுக்குத் தெளிவுறுத்துகின்றேன். வேண்டுமென்றே சில சக்திகளினால் உங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படின் அதற்கான சட்டரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு நானும் எமது கட்சியும் முன்னிற்போம் என்பதையும் நான் தெரியப்படுத்துகின்றேன்” என விக்கினேஸ்வரன் குறிப்பிட்டு அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் அளித்துள்ளார்.

இதுவரை காலமும் போராளிகளை கையேந்தும் நிலையில் வைத்து தங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த நினைத்த தரப்பினரின் கனவுகளைத் தகர்த்து மக்களுக்கான  அரசியலை முன்னைடுக்க விக்கினேஸ்வரனின் அழைப்பை ஏற்று அரசியலிலும் போராளிகள் சாதிப்பார்கள் என நம்பலாம்.