எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் தேர்தலிலும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை இருப்பதால், அடுத்த தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக நடக்கும் சதிகளுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், தான் எதற்கும் பின்வாங்குபவனல்ல எனவும் அவர் கூறினார்.
அத்துடன், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.