நாளை வரை மின்வெட்டு இல்லை – மின்சார சபை உயர்நீதிமன்றில் உறுதி

pawer cut
pawer cut

நாளைய தினம் வரையில், மின் தடை அமுலாக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை, இன்று உயர்நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு, இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், மின்சார சபை இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது.

பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில், மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் வழங்கிய வாக்குறுதி மீறப்படுகின்றமை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த மனு தொடர்பில், தமது கட்சிக்காரர்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, கால அவகாசம் வேண்டும் என மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் சார்பில், மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதற்கமைய, குறித்த மனுவை நாளைய தினம் விசாரணைக்கு அழைக்குமாறு சட்டத்தரணிகள் மன்றில் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், நாளைய தினம் வரையில், மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டை இலங்கை மின்சார சபை உயர்நீதிமன்றில் வழங்கியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரியவும் இலங்கை மின்சார சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித எகலஹேவாவும் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.