‘திலீபனின் நாளில்’ திரளாக எழுவோம் – எழுக தமிழுக்கு ஐங்கரநேசன் ஆதரவு

ttpi
ttpi

“தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் செப்ரெம்பர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். ஆயுதப் போராளியான திலீபன் அவர்கள் ஜனநாயக வழிமுறைகளில் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிகழ்த்தி உயிர் துறந்த மாதமாகும். அவர் மெல்லமெல்லத் தன் உயிரைக் கருக்கிக் கொண்ட நாட்களில் ஒன்றான செப்ரெம்பர் 16 ஆம் திகதி தமிழ் மக்களை திரளச் செய்யும் எழுக தமிழ்ப்பேரணிக்குத் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருக்கிறது. தமிழ் மக்கள் நாம் அனைவரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் விதமாக தமிழ்த் தேசியத்தின் பெயரால் எழுக தமிழில் தமிழராய்த் திரண்டெழுவோம்” என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

எழுக தமிழ் தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், பொதுச் செயலாளர் மகேசன் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தஅறிக்கையில்,

முள்ளிவாய்க்காலில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்பலம் ஒழிக்கப்பட்டும், ஆயுதப் பலத்தை ஒழித்தல் என்ற போர்வையில் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டும் பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனாலும், மிகப்பெரும் மனிதப் பேரழிவு நிகழ்ந்து ஒரு தசாப்தத்தைக் கடந்துவிட்டபோதும், ஆயுதப் போராட்டம் முளைகொண்டதற்கான காரணங்கள் களையப்படவில்லை.

வெளிச்சக்திகள் தங்களின் நலன்களுக்காக எதிரெதிர் முகாம்களில் இருந்த தென்னிலங்கை அரசியல் தலைவர்களைக் குளோனிங் செய்ததுபோல இணைத்து உருவாக்கிய நல்லாட்சிஅரசாங்கமும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எதனையும் தராமல் காலத்தை இழுத்தடித்துக் கடைசியில் காலாவதியாகி நிற்கிறது.

யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும், கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பாகவும், இராணுவம் ஆக்கிரமித்த நிலங்களின் விடுவிப்புத் தொடர்பாகவும் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றபோதும் அரசாங்கம் இவை எவற்றையும் காதில் வாங்குவதாக இல்லை. மாறாக, சத்தம் இல்லாமல் யுத்தத்தை வேறு வடிவங்களில் தொடர்ந்தவாறுதான் உள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் புதிது புதிதாக எழும் விகாரைகள், வனவளத் திணைக்களம் – வனஜீவராசிகள் திணைக்களம் – தொல்லியல் திணைக்களம் -மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்ற அரசின் நிர்வாக அலகுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புகள் தமிழின இருப்பைக் கேள்விகுறியாக்கி வருகிறது. கூடவே, தன் கட்டமைக்கப்பட்ட இந்த இன அழிப்பை வெளித்தெரிய விடாதவாறு அபிவிருத்தி என்ற திரைபோட்டு மறைத்தும் வருகின்றது.

தமிழ் மக்களின் ஆயுதப்பலம் தோற்கடிக்கப்பட்டபின்னர், பேரினவாத ஒடுக்குமுறைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய தலைமைத்துவம் தமிழ் மக்களிடையே இல்லை. எங்களிடம் இருப்பவர்கள் கட்சிகளின் தலைவர்களே. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்குமான ஒரு தேசியத் தலைவரைக் காலம் அடையாளம் காட்டும் வரை தமிழ் மக்கள் மக்களாகத் திரட்சி அடைவதே தமிழ் மக்களுக்கான ஒரு தற்காப்புப் பலம் ஆகும்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் செப்ரெம்பர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். ஆயுதப் போராளியான திலீபன் அவர்கள் ஜனநாயக வழிமுறைகளில் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிகழ்த்தி உயிர் துறந்த மாதமாகும். அவர் மெல்லமெல்லத் தன் உயிரைக் கருக்கிக் கொண்ட நாட்களில் ஒன்றான செப்ரெம்பர் 16 ஆம் திகதி தமிழ் மக்களை திரளச் செய்யும் எழுக தமிழ்ப்பேரணிக்குத் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருக்கிறது.

தேசியம், சூழலியம், சுயநிர்ணயம் என்ற முக்கோட்பாடுகளையும் தனது கொள்கையாக வரித்துக்கொண்டுள்ள அரசியற் கட்சியான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் எழுக தமிழுக்கு ஆதரவை வெளிப்படுத்தி நிற்பதோடு, அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் அன்றைய தினம் காலை 09.00 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அல்லது நல்லூர் ஆலய முன்றலில் திரண்டு பேரணியில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் மக்கள் நாம் அனைவரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் விதமாக தமிழ்த் தேசியத்தின் பெயரால் எழுக தமிழில் தமிழராய்த் திரண்டெழுவோம் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.