ஊடகவியலாளர்களின் மனிதாபிமான செயற்பாடு

old man
old man

வவுனியா பேருந்து நிலையத்தில் அநாதரவாக நின்ற மாத்தறை- கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 80 வயதுடைய பிரேமதாச எனும் தென்னிலங்கை முதியவா் ஒருவருக்கு வவுனியா ஊடகவியலாளா்கள் அடைக்கலம் பெற்றுக் கொடுத்திருக்கின்றனா்.

மாத்தறையில் இருந்து வவுனியா வந்திருந்த குறித்த முதியவர் பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நீண்ட நேரமாக அமர்ந்து இருந்த நிலையில் , அங்கிருந்த உணவகம் ஒன்றில் உணவு கேட்டு பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து குறித்த முதியவருடன் உரையாடிய உணவக உரிமையாளர் அவர் அடைக்கலம் இல்லாது தனிமையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை அறிந்து ஊடகவியலாளா்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் முதியவரின் நிலமையை கேட்டறிந்த பின்னர் வவுனியா மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் ஆகியோருக்கு முதியவர் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

கூமாங்குளம் பகுதியில் உள்ள சாயி சிறுவர், முதியோர் இல்லத்தில் முதியவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்ட நிலையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் கோவில்குளம் சிவன் முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டு முதியவருக்கு அடைக்கலம் கொடுக்க அனுமதி பெற்றிருந்த நிலையில் முதியவரை ஊடகவியலாளர்கள் அங்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

இந்நிலையில் உதவிபுரிந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.