நல்லூரில் தொடங்கியது எழுக தமிழ் பேரணி! ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

ealuka
ealuka

தமிழ்மக்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எழுக தமிழ் நிகழ்வில் பெருமளவு மக்கள் பங்கேற்றிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகியுள்ள பேரணி யாழ்ப்பாணம் முற்றவெளி நோக்கி நகர்ந்துசெல்கிறது.

குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்த தமிழ் மக்கள் பேரவை கட்சி பேதமின்றி அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. அதேபோல இன்றைய நாள் கதவடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உட்பட்ட பல பகுதிகளில் முழுமையான கதவடைப்பு முன்னெடுக்கப்பட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுவருகின்றது.

ஆனாலும் வவுனியா வர்த்தகர் சங்கம் குறித்த போராட்டத்திற்கு ஒத்துழைக்க முடியாது என்று அறிவித்திருந்த நிலையில் வவுனியாவில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்றும் ஆனாலும் வழமையான இயல்பு நிலை காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருப்பதாக தெரியவருகிறது.
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்து, எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணையை நடத்து, தமிழ்ப் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து ஆகிய ஆறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த எழுக தமிழ் பேரணி நடத்தப்படுகிறது.

எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்களை ஏற்றி வருவதற்காக 35 இற்கும் அதிகமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இன்றைய எழுகத் தமிழ் பேரணிக்கு 60இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவைத் தெரிவித்திருப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.