பௌத்தர்களுக்கு தனியான அரசாங்கம்; ஞானசார தேரர் தெரிவிப்பு

gnanasara thero
gnanasara thero

பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாடு நுகேகொட பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தேசிய தலைவரொருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஞானசார தேரரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைவரொருவரை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேரர்கள் ஒன்று கூடுகின்றனர். இது அதிசயமாக இருக்கிறது. உண்மையில் நாம் கட்சி சாராத இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தேசிய தலைவரொருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிங்களவர்களுக்கு ஒரு தலைவர் வேண்டும். நாட்டிற்கு தேவை தேசிய தலைவர். நாட்டிற்கு வரவேண்டிய அனைத்து கேடுகளும் வந்துவிட்டன. பல வருடங்களுக்கு நாடு பின்னோக்கி சென்றுவிட்டது. இந்த தலைவரை தேடும் பயணத்தில் பயணத்தில் வழிதவறியுள்ளனர். சரி பிழையை தேர்ந்தெடுக்க முடியவில்லை.

நாட்டை சுற்றி நாட்டுக்குள் எதிரிகள் முகாமிட்டுவிட்டனர். வஹப்வாதம், அடிப்படைவாதம் என்பவற்றை முன்வைத்து எம்மை பலவந்தப்படுத்துகின்றனர்.

இதற்கு முகம்கொடுப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் எங்கே? அதை தயாரிப்பதாக இருந்தால் எங்கள் மதகுருமார் ஒரே நோக்கத்தில், ஒரு கொள்கைக்கு, ஒரு வேலைத் திட்டத்திற்குள் ஒன்றுபட வேண்டும்.

தேசிய தலைவரொருவரைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால், நாம் மிகப்பெரிய அழிவொன்றை சந்திக்க நேரிடும்.

ஒரு அமைப்பாக எமக்கு எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரோ தேர்தலோ எதுவும் அவசியமற்றது எமக்குத் தேவை எமது நாடு எனவே இந்த நாட்டை உருவாக்கும் ஆட்சியைப் பற்றி நாம் முதல் தடவையாக கண்டியில் கூறியிருந்தோம். நாம் பௌத்தர்களுக்காக தனியான பௌத்த அரசாங்கமொன்றை உருவாக்குவோம்.

இந்த 70 வருடமாக நாட்டில் ஆட்சியமைத்துள்ள அனைத்து தலைவர்களுக்கும் அவர்களது பங்காளிகளுக்கும் கூறுவது என்னவென்றால், கட்சிகளையும் சின்னங்களையும் கைவிட்டுவிட்டு நாட்டுக்காக ஒன்றிணைய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.