பலாலியில் காணி சுவீகரிக்கப்படுவதை ஏற்க முடியாது – சுரேஷ்

Suresh
Suresh

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காகப் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

வடக்கு மாகாணத்தில் ஒன்றரை லட்சம் இராணுவம் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் இருக்கின்றார்கள். வேறு இடங்களில் இருக்கக்கூடிய இராணுவத்தினரைப் பலாலியில் குடியேற்றுவதற்காக எங்களுக்கு 1000 ஏக்கர் காணி தேவை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. யுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்குப் பின்னர் ஆயுத ரீதியாக எந்த வொரு செயற்பாடுஇல்லாத நிலையில் தொடர்ந்தும் லட்சக்கணக்கான இராணுவத்தை வடக்கில் பேணியவாறு தமிழ் மக்களுடைய காணிகளை இராணுவ வசம் வைத்துக்கொண்டு இராணுவக் குடியிருப்புக்களை உருவாக்குவது
என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆகவே வடக்கு ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காணிகள் மக்கள் நெடுங்காலமாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்த பிரதேசங்கள். ஆகவே இது இராணுவத்துக்குச் சொந்தமான நிலங்கள் அல்ல.பலாலியில் பிரமாண்டமான விமான நிலையம் எமக்கு இப்போது தேவையில்லை என்று பலரால் கூறப்படுகின்றது. பிரமாண்டமாக விமான நிலையத்தை அமைக்கும் சூழல் வரும்போது காணிகளை சுவீகரிப்பது என்பது வேறு விடயம். இன்று அந்த மக்களிடம் காணிகளைக் கையளிக்க வேண்டியதுதான் முக்கியமானது.

எனவே இராணுவத்துக்கு ஆயிரம் ஏக்கர், விமான நிலையத்துக்கு ஆயிரம் ஏக்கர் என்று மக்களின் காணிகளை சுவீகரிப்பது என்பதைஏற்றுக்கொள்ள முடியாது – என்றார்.