அரச ஊழியர்களின் காணிகளை ரத்து செய்ய தீர்மானம்

NHDA
NHDA

அரச ஊழியர்களுக்கு ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது உரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை காணியற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் 600 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணி வழங்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதியில் தற்போத 80 குடும்பங்கள் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர்.

200 பேர் வரையில் பகுதியளவில் வீடுகளை அமைத்துள்ளதுடன் ஏனையோர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளிற்குள் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அத்துடன் 100 இற்கும் மேற்பட்டோருக்கு வீடமைப்பு அதிகாரசபையால் வீடு கட்டுவதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளனவே தவிர அவர்கள் குடியிருக்கவில்லை.

கடந்த மாதம் ஓமந்தை பகுதியில் பொதுமக்களால் குறித்த விடயம் தொடர்பாகவும், தமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியவசிய உட்கட்டுமான வசதிகள் தொடர்பான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் உத்தியோகத்தர்களின் குறைப்பாடுகள் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா வீடமைப்பு அதிகார சபைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் தெரிவிக்கையில்,

“குறித்த பிரச்சினை தொடர்பாக தமது தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி காணிகளில் வசிக்காதோர் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கவுள்ளோம்.

அதேவேளை வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகளின் உரிமை இரத்து செய்யப்பட்டு காணி அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவுள்ளது.

காணி வழங்கப்பட்டவர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்படும்” என தெரிவித்தார்.