முஸ்லிம்களுக்கு ஒரு முள்ளிவாய்க்காலை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஹரிஸ் எம்.பி சாடல்

FB IMG 1579373300480
FB IMG 1579373300480

2009ம் ஆண்டு தமிழ் மக்களை பலவீனப்படுத்திய முள்ளிவாய்க்கால் நிகழ்வு போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னால் உள்ள காரணங்கள் முஸ்லிம் சமூகத்திற்கும் அமைந்து விடக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாய்ந்தமருதில் நேற்று (18) இடம்பெற்ற முகநூல் செயற்பாட்டாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையின் போது இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு இன்று எமது சமூகத்தின் நிலை சம்மந்தமாக பல்வேறு விமர்சனங்கள், பல்வேறு வகையான பார்வைகளும் சமூக வலைத்தளங்களினூடாக சென்று கொண்டு இருக்கின்றன.

இந்நாட்டில் அரசியல் அதிகாரத்தையும் அதன் தன்மையையும் தீர்மானிக்கின்ற சக்தியாக சமூக வலைத்தளங்களும் அதனை கையாளுகின்றவர்களும் காணப்படுகின்றார்கள். இவ்வாறான ஒரு நிலைமை 2010, 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்றவில்லை.

2005ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்று இருந்தார்.அந்த காலகட்டத்திலும் இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படவில்லை.

எமது பார்வையில் தமிழ் சமூகம் 2009ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனுடன் அவருடைய முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்பு எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டதோ அதே போன்று ஒரு நிலை எமது முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு முள்ளிவாய்க்காலாக எதிர்வருகின்ற பொதுத் தேர்தலின் பின்னாலுள்ள காரணங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றேன்.

சமூக வலைத்தளங்கள் வந்த பின்பு குறிப்பாக முகநூல் ஊடகத்தின் தாக்கத்தின் பின்பு அரசியல் தீர்மானம் என்பது இந்த சமூக வலைத்தளங்களை கையாளுகின்றவர்களின் கையில் மாறி இருக்கின்றது.

தற்போதைய மோடியின் ஆட்சி சமூக வலைத்தளங்களை மையப்படுத்தியே விஸ்வரூபம் கண்டுள்ளது. தற்போது மஹிந்த தரப்பினரின் வெற்றியிலும் அவ்வாறான நிலை காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்
ரக்கீப் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் சமூக வலைத்தள எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.