இலங்கை கடற்பரப்பில் வைத்து 4 இந்திய மீனவர்கள் கைது

IMG 9820
IMG 9820

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்தினைச் சேர்ந்த பாரதி, சசிகுமார், மணி, அசோக்குமார் ஆகிய நான்கு மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பினருகே நேற்று இரவு (18) இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை (19) யாழ் பண்ணையிலுள்ள நீரியல் வளத் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டு குறித்த மீனவர்களும் பதிவு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கி தமது படகையும் கடலுக்குள் மூழ்கடித்தே தம்மைக் கைது செய்துள்ளதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.