தாக்குதலை நடத்திய பொலிசார் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்; ச.வியாழேந்திரன்

amal 1
amal 1

மட்/ சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 26 ஆவது கிறிக்கட் சுற்றுப் போட்டி கடந்த (14.09.2019) அன்று சிவானந்தா மைதானத்தில் நடைபெற்றது. சுமுகமான முறையில் சென்று கொண்டிருந்த இப்போட்டியில் பார்வையாளர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மைதான வாசல் கதவினைப் பூட்டி விட்டு கைகலப்பினை அடக்க அங்கு நின்ற அனைவர் மீதும் பாரபட்சமின்றி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் உரிய விசாரணை நடாத்தி, பொலிசார் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ச.வியாழேந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது

“மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும், திருகோணமலை கோணேஸ்வரா பாடசாலைக்குமிடையில் நடந்த நட்புறவு கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி, காத்தான்குடி பொலிசார் பாடசாலை மைதானத்திற்குள் நுழைந்து பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மீது அடாவடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்டுமிராண்டி தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மைதானத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்க இவர்களிற்கு அதிகாரத்தை வழங்கியது யார்? அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களை கைது செய்திருக்கலாம். அல்லது பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கலாம்.

இதற்கு தீர்வு காணப்படாவிட்டால், இன்று பாடசாலை மைதானத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் நாளை பாடசாலை வகுப்புக்குள்ளும் புகுந்து தாக்குதல் நடத்தலாம்.

இவ்வாறான தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெற கூடாது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.