Batticaloa Campus ஐ பட்டம் வழங்கும் நிறுவனமாக ஏற்க முடியாது- கோப் குழு தெரிவிப்பு

batti campus
batti campus

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Batticaloa Campus தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் நேற்றைய தினம் கோப் குழுவில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு தூதுக் குழுவொன்றை சந்திப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளமையின் காரணமாக அவர்கள் கோப் குழுவில் ஆஜராகவில்லை என கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Batticaloa Campus தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல விடயங்கள் வெளியாகின.

  • Batticaloa Campus திட்டத்திற்கான உடன்படிக்கை
  • Batticaloa Campus நிர்மாணிக்கப்பட்டுள்ள காணி
  • கட்டட நிருமாணத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிதி

இதேவேளை, Batticaloa Campus திட்டத்திற்கான உடன்படிக்கை சட்டவிரோதமானது எனவும், Batticaloa Campus நிர்மாணிக்கப்பட்டுள்ள காணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கோப் குழு நேற்று தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கான வெளிநாட்டு நிதி முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வங்கியின் தலைவர் உள்ளிட்ட நிருவாகக்குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர். Batticaloa Campus இற்கு நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சவூதி அரேபியாவிடம் மத்திய வங்கியினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Batticaloa Campus இற்காக 4.5 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதுடன், அதில் 3.6 மில்லியன் ரூபா சவூதி அரேபிய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நிதியில் தற்போது 36,000 ரூபாவே எஞ்சியுள்ளதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் 7 வங்கிகளினூடாக நிதிப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த நிதி வேறு ஏதும் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் Batticaloa Campus தொடர்பில் மேற்கொண்ட மீளாய்வின் பின்னர் பட்டம் வழங்கும் நிறுவனமாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரின் புதல்வர் ஆகியோருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.