3வது நாளாகவும் தொடர்ந்த வேலை நிறுத்தம்!

01 2
01 2

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் சம்பள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று மூன்றாவது நாளாக சாலை முன்பாக கூடி நின்று சாலையின் உள்ளே செல்லாமல் தங்களுடைய வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இரவு பகல் பாராது மக்களுக்கு சேவை செய்யும் எங்களுக்கு 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்காமல் உள்ளது. எனவே எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தினை உடனடியாக 2019 ஜீலை மாதத்தில் இருந்து தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இல்லையேல் எங்களது போராட்டம் தொடரும் என வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

சாரதி, காப்பாளர், தொழில் நுட்ப பிரிவு ஊழியர்களுக்கு 2019 ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபா சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு இருக்கும் வருடாந்த உயர்வு எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும்,

ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சகல ஊழியர்களுக்கும் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்

என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொழில் புரிவோர், பாடசாலை மாணவர்கள், அன்றாட தொழிலுக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்லாமல் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.