‘எழுக தமிழ்’ வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்:சுரேஷ் பிறேமச்சந்திரன்!

suresh
suresh

எழுக தமிழ் 2019இன் வெற்றிக்காக அயராது உழைத்தவர்களுக்கும்
கடும் சிரமத்திற்கு மத்தியிலும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்.

தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதை தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக்காட்டும் முகமாக தமிழ் மக்கள் பேரவையினால் கடந்த 16.09.2019 திங்கட்கிழமையன்று முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் 2019 பேரணியை வெற்றியடையச் செய்வதில் முன்னின்று உழைத்த அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

தமிழ் மக்கள் பேரவையின் அறைகூவலை ஏற்று, தமிழ் மக்களின் இன்றைய அவல நிலையை இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் குறிப்பாக ஐ.நாவிற்கும் எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்ட எழுக தமிழ் 2019 பேரணியை வெற்றியடையச் செய்வதில் முன்னின்று உழைத்திட்ட தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இன்றைய தேவையை உணர்ந்து உணர்வுபூர்வமான ஆதரவை நல்கிய பொது அமைப்புக்களுக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சிரம்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இலங்கை தமிழ்த் தேசிய இனத்தின் அவலநிலை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த சக்திகளின் எதிர்ப்பிரச்சாரத்தையும் மீறி இந்தப் பேரணி வெற்றியடைந்தமையானது எமது தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 16.09.2019 அன்று மேற்கொள்ளப்பட்ட எழுக தமிழ் 2019 பேரணிக்கு ஆதரவாக தமிழகத்திலும் கனடா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட புலம்பெயர் பிரதேசங்களிலும் குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறும் இன்றைய காலத்தில் ஜெனிவாவிலும் அதே தினத்தில் எழுக தமிழ் 2019 பேரணிகள் நடைபெற்றமை களத்தில் நின்று போராடும் தமிழ்த் தேசிய இனத்திற்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

இந்த நேரத்தில் அவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம். பேரணிகள் நடைபெற்ற இடங்கள் அனைத்திலும் ஒரே விதமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தமையானது எமது கோரிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இனியாவது சர்வதேச சமூகம் விளிம்பு நிலையில் அல்லது நலிவடையும் நிலையில் இருக்கும் இலங்கை தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தையும் இருப்பையும் காப்பதற்கு காத்திரமான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வது அவசியம் என்பதை எழுக தமிழ் 2019 எடுத்தியம்பியிருக்கிறது.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான கௌரவ க.வி. விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் இனப்படுகொலைக்கான சர்வதேச வரையறையை அவருக்கே உரிய பாணியில் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் முன்வைத்து இலங்கை அரசாங்கம் 1950இல் கைச்சாத்திட்ட ஐ.நா.பிரகடனத்தை எவ்வாறு மீறியுள்ளது என்பதை கூடியிருந்த மக்கள் மத்தியில் எடுத்துக் கூறியிருந்தார். இது சர்வதேச சமூகத்தையும் சட்டவல்லுனர்களையும் சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்திய அரசாங்கத்திடமும், ஐ.நா. பொதுச்செயலாளரிடமும், சர்வதேச தளங்களிலும் தான் நிறைவேற்றுவதாகக் கூறிய எந்தவொரு விடயத்தையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதுடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி எடுத்துக்கொண்ட தீர்மானங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்றும் அதனை இலங்கை அரசாங்கத்தை நிறைவேற்ற வைப்பதினூடாகவே இலங்கைத் தமிழர்களின் மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதையும் இப்பேரணி உணர்த்தி நிற்கின்றது.

எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான இணைந்த வடக்கு-கிழக்கில் ஒரு சமஷ்டி அலகை நிர்மாணிப்பதற்கும் தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்திரித்து இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச ரீதியிலான விசாரணையை நடத்தி எமது தேசிய இனத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தேசிய அரசாங்கம் உருவாகும் என்றும் அந்த தேசிய அரசாங்கத்தினூடாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்ததற்கு இணங்க, இலங்கை தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவினை வழங்கியிருந்தனர்.

ஆனால் இந்த ஐந்து வருட காலகட்டத்தில் எந்தவொரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படாமல் மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்குமாறு சிங்கள மேலாதிக்க சக்திகள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதனூடாகவே இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப முடியும்.

இந்த விடயங்களை இடித்துரைப்பதற்காக ‘எழுக தமிழ்’ பேரணி 2019இல் அணிதிரண்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.