பலரது எதிர்ப்பின் மத்தியில் அமைச்சரவைக் கூட்டம் தீர்மானமின்றிய நிலையில் முடிவு!

Cabinet meeting
Cabinet meeting

இன்று அதிகாலை மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் இன்று மாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. அதன்படி விசேட அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டமைக்கான விளக்கத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கும் அதுதொடர்பிலான விசேட அமைச்சரவைப் பத்திரத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.

பிரதமர் ரணில் முன்வைத்த யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த நடாத்தப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டம் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது.

இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஒரு குழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சர்களான மங்கள சமரவீர , மனோகணேசன், ரவூவ் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பிரதமரின் யோசனைக்கு கடுமையான எதிர்ப்பை முன்வைத்தனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனதிபதியும் பிரதமரும் அவசர அவசரமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்பது ஜனாதிபதித்தேர்தல் வர்த்தமானி வெளியிடப்பட்ட நேரத்தில் விவாதிக்கப்படாது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து கலந்து ஆலோசிப்பதை விட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியிடுவதே அனைவரது குறிக்கோளாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பலரின் எதிர்ப்புக்களின் மத்தியிலும்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க ஆகிய இருவர் மட்டுமே ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.