நீதித்துறையை பாதிக்கும் அரசாங்க செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் – சுமந்திரன்

sumanthiran press meet
sumanthiran press meet

நீதித்துறையின் சுதந்தித்தைப் பாதிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் நகரிலுள்ள அரவது அலுவலகத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் பழிவாங்கல்கள் சம்மந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு ஒரு பணிப்புரை விடுத்ததாகச் செய்தி வந்திருக்கிறது. இது அந்த 11 இளைஞர்கள் கொழும்பிலே கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் சம்மந்தமாக விசேட மேல் நீதிமன்ற அமர்விலே பல கடற்படை புலனாய்வாளர்கள், கடற்படை தளபதிகள் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு.

இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னதாக மேல் நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு இன்றைக்கு குற்றப்பத்திரங்கள் கையளிக்க வேண்டாம், இது சம்மந்தமாக அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒரு பணிப்புரை விடுக்க இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதி ஆணைக்குழு இனி என்ன சொல்லப் போகிறது என்பதை தெரிந்து கொண்டு நீதிமன்றத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றப்பத்திரங்கள் எதிரிகளுக்கு கையளிக்கப்பட்டது. ஆனாலும் இதிலே முக்கியமான ஒரு எதிரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருனாகொட பிணையிலே இருக்கிற அவர் அன்றையதினம் நீதிமன்றத்தில் சமூகமாகி இருக்கவில்லை.

அதன் காரணமாக அவருக்கு குற்றப் பத்திரம் கையளிக்கப்படவில்லை. அடுத்த தினத்திலே நீதிமன்றுக்கு சமூகமளிக்கும்படி அறிவித்தல் கொடுக்கும் படியாக மட்டும் தான் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால் வழமையாக பிடியாணை பிறப்பித்திருப்பார்கள். ஆனால் அது நீதிமன்றத்தினுடைய முடிவைப் பொறுத்தது. அவர்கள் அவருக்கு அறிவித்தல் கொடுக்கும் படியாக உத்தரவிட்டு மற்றைய எதிராளிகளுக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குள்ளே நேற்றைய தினம் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு ஒரு அறிவித்தலைக் கொடுத்திருக்கிறது.
இதிலே வசந்த கருனாகொடவையும் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளராக இருந்த தசநாயக்க என்பவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும் படியாக சிபார்சு செய்து ஒரு அறிவித்தலை சட்டமா அதிபருக்கு கொடுத்திருக்கிறது.

இது மிக மிக மோசமான ஒரு அரசியல் தலையீடு என்று தென்படுகின்றது. சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாக இயங்குகிற ஒரு திணைக்களம்.
வழமையாக சட்டமா அதிபர் திணைக்களம் அரச இயந்திரமாக அல்லது அரசின் கைக்கூலியாக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டைத் தான் நாங்கள் முன்வைப்போம். ஆனால் இங்கே சட்டமா அதிபர் முன்னெடுத்த ஒரு வழக்கைக் கூட ஜனாதிபதி ஆணைக்குழுவை வைத்து அவருடைய செயற்பாடுகளைத் தடுப்பதற்கான ஒரு முயற்சி நடைபெறுகிறது.

காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம் மிகப் பெரிய ஒரு விவகாரம். அதிலே நேரடிச் சாட்சியங்களோடு அரச படையினரிடத்திலே கையளிக்கப்பட்டவர்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கிறார்கள். அந்த ஒரு விடயமும் இன்னமும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகளுக்கும் மற்றைய வெளிநாடுகளுக்கும் காண்பிப்பதற்காக ஒரு கண்துடைப்பு நாடகமாக இந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட விடயத்தை மட்டும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. சட்டமா அதிபரும் அதனை முன்னெடுத்திருந்தார்.

மற்ற விடயங்கள் செய்யப்படாமல் இறந்த போதும் கூட இந்த ஒரு விடயமாவது சரியாக நடக்கிறதா நடாத்தப்படுகிறதா என்று நாங்கள் இதனை அவதானித்துக் கொண்டிருந்தோம். கொழும்பிலே கடத்தப்பட்ட இந்த இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காகக் கடத்தப்பட்டவர்கள். கப்பமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு திருகோணமலை கடற்படை முகாமிலே இவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலை குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே நீதிமன்றத்திலே சமர்ப்பித்திருந்தது.

இதனோடு சம்மந்தப்பட்டவர்களாகத் தான் இந்த கடற்படை புலனாய்வாளர்களும் இறுதியாக அந்த வேளையில் கடற்படைத் தளபதியாக இருந்தவர் உட்பட அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் இருப்பதன் அடிப்படையிலே சட்டமா அதிபர் இந்தக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்.

ஆகவே ஏராளமான நிகழ்வுகள் இருந்த போதிலயும் அதில் ஒன்றைத் தான் எடுத்து அதனை முன்னெடுக்கிற இந்தச் சம்பவத்திலே கூட தற்போது பதவிக்கு வந்திருக்கிற அரசாங்கம் அதனை உடனடியாக நிறுத்துவதற்கான ஒரு மோசமான நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இந்தச் சம்பவம் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம். இப்பொழுது அவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.

ஐனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் அவர் பேசுகின்ற போது 16 ஆம் திகதி தேர்தல் 17 ஆம் திகதி இப்படியான சம்பவங்கள் சம்மந்தமாக கைது செய்யப்பட்டு இருக்கிற அத்தனை அரச படைத்தரப்பினரையும் நான் 17 ஆம் திகதி காலையிலே விடுவிப்பேன் என்று சொல்லியிருந்தவர். ஆனால் அப்படியாக 17 ஆம் திகதி ஒருவரும் விடுவிக்கப்படா விட்டாலும் கூட இப்பொழுது அதற்கான செய்முறைகள் நடைபெறுகிறதை நாங்கள் காணக் கூடியதாக இருக்கிறது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீன செயற்பாட்டிற்கு எதிராக செய்யப்படுகிற ஒரு நடவடிக்கை மட்டும் அல்ல இது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கின்றதான நீதித்துறையின் சுதந்திரத்தலேயும் தலையீடு செய்கிறதான ஒரு மோசமான நடவடிக்கையாக நாங்கள் இதனைப் பார்க்கிறோம்.

இது மிகவும் கண்டனத்திற்குரிய ஒரு விடயம். நீதிமன்றத்தினுடைய சுயாதீனத்தை சட்டமா அதிபருடைய சுயாதீனத்தை அதிலே தலையீடு செய்கிற இந்தச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆணைக்குழுவை வைத்து இப்படியான செயற்பாடுகளைச் செய்வது சட்டவிரோதமான செயற்பாடு. இதற்கு எதிராக உடனடியாக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

மேலும் அண்மையிலே மேல் நீதிமன்ற நீதிபதியை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொடுத்த பணிப்புரை நிச்சயமாக சட்டவரைபை மீறிய ஒரு செயற்பாடு. ஆனால் அது மட்டுமல்ல மற்றவர்களையும் இதற்கு முதல் கைது செய்யச் சொன்னதும் அதே மாதிரியாகத் தான். அது ஒரு புறம் இருக்க சட்டமா அதிபர் சரியாகச் செயற்படுகிறாரா இல்லையா என்பது குறித்தான விவாதம் இருக்கும். ஆனால் இந்த வழக்கு சம்மந்தமாக சட்டமா அதிபர் சரியாகச் செயற்பட்டிருக்கிறார்.

கொண்டு வரப்பட்ட விசாரணை அறிக்கைகளில் இரந்த படைத்தரப்பின் முன்னைய தளபதி கூட இதிலே குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர் என சரியாகத் தீர்மானித்து நீதிமன்றத்திலே வழக்கைத் தொடுத்திருக்கிறார்.

நீதிமன்றம் தான் இறுதியாக அதைத் தீர்மானிக்க வேண்டும். அதை ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானிக்க முடியவே முடியாது. இது நீதிமன்றத்திற்கு எங்களுடைய அரசியலமைப்புச் சட்டத்திலே கொடக்கப்பட்டிருக்கிற தனித்துவமான அதிகாரம். அதிலே வேறு எவரும் தலையிட முடியாது. ஆகையினாலே இப்படியான சம்பவங்கள் இதற்கு முதல் நடந்தது இல்லை. மிக மோசமான நீதித்துறை தலையீடு இப்போது ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக கடந்த ஆட்சியிலும் இவ்வாறு சட்டத்திற்கு முரணாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆகவே இது சட்டவிரோதமானது. அரசியலமைப்பிற்கு முரணனானது. ஆகவே இதற்கு எதிரான நடவடிக்கைகயையும் நாங்கள் எடுப்போம்.

மேலும் படைத்தரப்பினர் யுத்தத்தை வென்ற காரணத்தினாலே அவர்கள் பலியாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடக்கிறது என்று அரசாங்கம் காட்ட முயல்கிறது. அப்படி செய்யப்படுகிறவர்களை நாங்கள் பாதுகாப்போம். நாட்டினுடைய இறைமையைப் பாதுகாத்தவர்கள் நாடு பிரிக்கப்படுகிறதை தடுத்தவர்கள் இவர்கள் நாட்டிற்கு முக்கியமானவர்கள் கதாநாயகர்கள் இவர்கள் இப்படியாக பழிவாங்கப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அவர்களுக்காக நாங்கள் எழுந்து நிற்போம் என்று சிங்கள மக்கள் மத்தியிலே தங்களைப் பிரபல்யப்படுத்துவதற்காக அரசாங்கம் செய்கிற நடவடிக்கையாகத் தான் இது உள்ளது” என தெரிவித்தார்.