மக்கள் மீது அன்பிருந்தால் அரசியல்வாதிகள் சாதிப்பார்கள், இல்லையென்றால் சம்பாதிப்பார்கள்: விக்கி!

z p11 Wigneswaran 01
z p11 Wigneswaran 01

படித்த, பண்பான, ஊழலற்ற இளைஞர்கள் / நடுத்தர வயதினர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலுக்கு அறிவிலும் பார்க்க அன்பே மிக்க அவசியம் என்பது எனது கருத்து. மக்கள் மீது அன்பிருந்தால் அரசியல்வாதிகள் சாதிப்பார்கள். இல்லையென்றால் சம்பாதிப்பார்கள் ஆனால் சாதிக்க மாட்டார்கள். ஆகவே எனது இலக்கு பொறுப்பான தமிழ் இளைஞர்களை / நடுத்தர வயதினர்களை, பணியனுபவம் பெற்றவர்களை மாவட்டம் தோறும் கண்டுபிடிப்பதே. தேர்தல்கள் வெல்வதிலும் பார்க்க எமது அரசியலுக்கு ஏற்ற பற்றுறுதியுள்ள வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பது அவசியம். தோதான வேட்பாளர்கள் கிடைத்தால்தான் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரம் ஒரு கேள்வி பதிலுக்காக வழங்கிய கருத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

19.09.2019 ஆம் நாள் வாரத்துக்கான கேள்வியும் பதிலும்:

கேள்வி:- “எழுக தமிழ்” பேரணியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். உங்கள் அடுத்த இலக்கு என்ன?

பதில்:- எனக்கு சார்பானவர் கேட்கும் கேள்வியா அல்லது ஒரு எதிர்மறை விமர்சகர் கேட்கும் கேள்வியா என்று எனக்குப் புரியவில்லை. என்றாலும் பதில் தர எத்தணிக்கின்றேன்.

அண்மைய “எழுக தமிழ்” வெற்றி பெற்றது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எம்முடன் நகமும் சதையுமாகச் சேர்ந்திருந்து தற்போது போர்க்கொடி தூக்குவோர் கூட மனதின் அந்தரங்கத்தில் இதனை ஏற்றுக்கொள்வர்.

ஆனால் வெற்றி என்பது எனது தனிப்பட்ட சொத்து அல்ல. எனது கட்சியின் வெற்றியுமல்ல. எமது கட்சியினர் பலர், எமது நலன் விரும்பிகள் பலர் இரவு பகல் பார்க்காது மக்களோடு மக்களாய் சேர்ந்து நின்று உழைத்தமை உண்மைதான். அவ்வாறே நேசக்கட்சிகளின் உறுப்பினர்களும் செய்தார்கள். இவர்கள் யாவரும் தமிழ் மக்கள் பேரவை சார்பிலேயே தமது உதவிகளை வழங்கினார்கள். தமிழ் மக்கள் பேரவையில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்து செயற்பட்டதால் ஏற்பட்டதே இந்த வெற்றி.

வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் எனப் பலரும் தமது நட்டத்திலேயே எமக்கு வெற்றியை வழங்கினார்கள். அவர்கள் சேவை மகத்தானது. கிழக்கில் இருந்தும் வன்னியில் இருந்தும் தீவுப் புறங்களில் இருந்தும் எம்மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து யாழ்.குடா நாட்டு மக்களுடன் சேர்ந்தே “எழுக தமிழை” வெற்றியடையச் செய்தார்கள்.

எனது பேச்சு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்ததென்று சொன்னால் அதுவும் கூட்டு முயற்சியே. ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டும் முழுமையாக என்னுடையது என்று கூறலாம். ஆகவே வெற்றி என்பது “எழுக தமிழ்” பேரணியில் பங்குபற்றிய ஒவ்வொருவருக்கும் உரியதொன்றே.

தமிழ் மக்கள் பேரவையின் மற்றுமொரு வெற்றியே. என்னைத் தனிப்பட்டுக் குறிப்பிட்டு எம்முள் வேற்றுமையை ஏற்படுத்தாதீர்கள்.
என்றாலும் “எழுக தமிழ்” எமக்குப் பாடங்கள் பலவற்றைத் தந்துதவியுள்ளன. உதாரணத்திற்கு வார இறுதியில் வைக்க வேண்டிய பேரணியை வாரநாளான திங்கட்கிழமைக்கு மாற்றியமை பிழை என்றே சொல்லத் தோன்றுகின்றது. பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வார நாட்களிலேயே வருகை தருவார்கள் எனப்பட்டது. ஆனால் அங்கு நடைபெறும் வேலை நிறுத்தம் பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் வருகையைத் தடைப்படுத்தியமை, எம்மால் ஏற்கனவே கணக்கில் எடுக்கப்பட முடியாது போய்விட்டது. வாரநாள் பேரணி ஆசிரிய ஆசிரியைகள், சிரேஷ்ட மாணவர்கள், அரசாங்க அலுவர்கள் மேலும் மற்றோர் பலரை வரவிடாமல் தடுத்துவிட்டது. வார இறுதி நாட்கள் என்றால் அவர்கள் யாவரும் பங்குபற்ற இடமளித்திருக்கும்.

எனினும் எமது வாரநாள் பேரணி வேறொரு சமூக அலகை முன்னுக்குக் கொண்டு வந்தது. தமது நட்டத்தைப் பாராது கடைகளை இழுத்து மூடிய எமது வணிகப் பெருமக்களையே நான் குறிப்பிடுகின்றேன். மேலும் ஒரு வேலைநாளில் தெருக்கள் யாவும் வெறிச்சோடிக் கிடந்தன. இ.போ.ச. வேலை நிறுத்தமும் அதற்கொரு காரணம். எமது மக்கள் பலர் கிட்டிய இடங்களில் இருந்து வராமைக்கு அதுவும் ஒரு காரணம்.

அடுத்த இலக்கு பற்றிக் கேட்டிருக்கின்றார் கேள்வியாளர்.

எமது அரசியலின் போக்கில் மாற்றம் ஏற்பட நாம் உழைக்க வேண்டும். படித்த, பண்புள்ள, ஊழலற்ற, நடுத்தர வயது மக்களை/ இளைஞர், யுவதிகளை அரசியலில் நாம் சேர்க்க வேண்டும். அவர்கள் பலதும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். எதைப் பற்றியுந் சொல்லித் தெரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழர்களின் வருங்காலம் பற்றியும் இந்நாட்டின் எதிர்காலம் பற்றியும் வலுவான சிரத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும். கொள்கைகளில் பற்றுறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். “பொது விடயங்கள் சம்பந்தமான தமது அக்கறையின்மைக்கு நல்லவர்கள் செலுத்தும் விலை துஷ்டர்களால் ஆளப்படுவதே” என்று கூறினார் ப்ளேடோ என்ற கிரேக்க தத்துவஞானி.

இதுவரை காலமும் அக்கறையின்றி எமது நன்மக்கள் இருந்த படியால்த்தான் துஷ்டர்கள் அரசியலில் இடம்பிடித்துள்ளார்கள். இனியாவது அந்த நிலையை மாற்ற எம் மக்கள் முன்வர வேண்டும். என்னுடைய சட்டத்தரணி சிங்கள நண்பர் ஒருவர் 1977ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றியீட்டி பிரதியமைச்சர் பதவியும் பெற்றார். அவரைப்பாராட்டி விட்டு அடுத்து என்ன செய்யப்போகின்றாய் என்று அவரிடம் கேட்டதற்கு அவர் சிங்களத்தில் “என்ன ஓய்! நான் தேர்தலுக்கு செலவழித்த பணம் முழுவதையும் திரும்பப்பெற வேண்டாமா?” என்றார். அப்படியே அவர் செலவழித்த பணத்தையும் விட பல மடங்கு பணம் அரசியலில் சம்பாதித்தார். கடைசியில் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டார்.

தேர்தல் என்பது ஒரு கேடு விளைவிக்கின்ற வட்டமாக மாறிவிட்டது. தேர்தலுக்கு செலவு, செலவை ஈடுசெய்ய பதவியில் ஊழல், ஊழல் நிகழ்த்தவே தேர்தல் என்று ஆகிவிட்டது.

தந்தை செல்வா, திரு.வன்னியசிங்கம் போன்றவர்கள் தம் கைவசம் இருந்தவற்றை மக்களுக்குச் சேவை செய்யப்புகுந்து இழந்தார்களே ஒளிய அரசியல் அவர்களைப் பணக்காரர்கள் ஆக்கவில்லை. எமது அரசியல் என்பது பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழியாக மாறிவிட்டது. இன்றைய அரசியல் நிலை தொடர்ந்தால் மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வன்முறைகளில் ஈடுபடக்கூடிய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவேதான் படித்த, பண்பான, ஊழலற்ற இளைஞர்கள் / நடுத்தர வயதினர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறுகின்றேன். அரசியலுக்கு அறிவிலும் பார்க்க அன்பே மிக்க அவசியம் என்பது எனது கருத்து. மக்கள் மீது அன்பிருந்தால் அரசியல்வாதிகள் சாதிப்பார்கள். இல்லையென்றால் சம்பாதிப்பார்கள் ஆனால் சாதிக்க மாட்டார்கள்.

ஆகவே எனது இலக்கு பொறுப்பான தமிழ் இளைஞர்களை / நடுத்தர வயதினர்களை, பணியனுபவம் பெற்றவர்களை மாவட்டம் தோறும் கண்டுபிடிப்பதே. தேர்தல்கள் வெல்வதிலும் பார்க்க எமது அரசியலுக்கு ஏற்ற பற்றுறுதியுள்ள வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பது அவசியம். தோதான வேட்பாளர்கள் கிடைத்தால்தான் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் பலருக்கு ஒரு மொழியே தெரியும். பிறமொழி பேசுபவர்களுடன் அவர்கள் எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்வதில்லை. மனம்விட்டுப் பேசுவதில்லை. எமது குறைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. இவ்வாறு தனியறைகளில் வசித்துக்கொண்டு பாராளுமன்றம் செல்லும் நிலை மாற வேண்டும். சரிசமனாக எவருடனும் எதிர்த்து நின்று பேசுந் தன்னம்பிக்கை எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வர வேண்டும்.

ஆகவே படித்த, பண்புள்ள, ஊழலற்ற இளைஞர்களை/ நடுத்தர வயதினரை எம்முடன் சேருமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நிச்சயம் அவர்கள் வந்து எம்முடன் சேர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.