ஐ.தே.க வேட்பாளர் தெரிவு தொடர்பில் தெரிவுக்குழு கூடுகிறது!

sajith ranil
sajith ranil

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தெரிவு செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு வரும் செவ்வாய்க் கிழமை 24ஆம் திகதி கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் கூடுகின்றது என்று நம்பகரமாக அறியவந்தது.

நேரடியாகக் களத்தில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும், கட்சியின் துணைத்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவும் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இணக்கமான முடிவு ஒன்று எட்டப்படாவிட்டால் செயற்குழுவில் தேர்தல் மூலம் வேட்பாளர் தெரிவு இடம்பெறும் என்றும் கூறப்பட்டது.

ஐ.தே.கவின் யாப்பின் 91ஆவது பிரிவின்படி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தெரிவு செய்யவேண்டும் எனக் கட்சி வட்டாரங்கள் சில சுட்டிக்காட்டின.

ஜனாதிபதி வேட்பாளர்களாக ரணசிங்க பிரேமதாஸ, காமினி திஸநாயக்க, ரணில் விக்கிரம சிங்க போன்றோர் கட்சியின் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டனர் என்றும் -2010 தேர்தலில் சரத் பொன்சேகாவையும், 2015 தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவையும் வேட்பாளராக நிறுத்தும் தீர்மானமும் கூட ஐ.தே.கட்சியின் செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் – அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது குறித்துஐ.தே. முன்னணியின் பங்காளித்தலைவர்கள் இடையே நேற்று மாலை நடைபெற்ற கூட்டமும்இணக்கம் ஏதும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது.

அலரி மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின்பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸா, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பதியுதீனின் ஒரு பிரதிநிதிஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரிவின்றி, இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஐ.தே.க. வேட்பாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்தனர் என்றும் -இது குறித்து தொடர்ந்தும்பேசுவது என முடிவெடுக்கப்பட்டது என்றும் மேலும் கூறப்பட்டது.

செவ்வாய்கிழமைக்கு முன்னர் இணக்கமான தீர்வு ஒன்று எட்டப்படாவிட்டால், கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பு மூலம் வேட்பாளர் தெரிவாவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.