பிரதமருக்கு சார்பானவர்களை ஐ.தே.க செயற்குழுவில் நியமிக்கும் முயற்சி; அகிலவிராஜ் மறுப்பு

akila viraj kariyawasam
akila viraj kariyawasam

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பிற்கு அமைய செயற்குழுவில் 92 உறுப்பினர்கள் உள்ளடங்குவதுடன், தற்போது 68 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். வெற்றிடமாகவுள்ள 24 ஆசனங்களுக்காக கட்சியின் தலைமைத்துவத்துடன் நெருங்கிய சிலரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஆஷூ மாரசிங்க, காவிந்த ஜயவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பிரியந்த பத்பெரிய, இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராய்ச்சி உள்ளிட்ட சிலர் அலரி மாளிகைக்கு இன்று காலை சென்றிருந்தனர். இதன்போது, செயற்குழு கூட்டம் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அது குறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

தற்போது செயற்குழுவில் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதும், இத்தருணத்தில் வெற்றிடங்களை நிரப்பும் தேவை இல்லை எனவும் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

இதேவேளை, கட்சியின் யாப்பிற்கு அமைய தாம் செயற்படுவதாகவும் செயற்குழுவில் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சில உறுப்பினர்கள் கூறுவது இடம்பெறாது எனவும் கட்சி யாப்பிற்கு அமைய அவ்வாறு நியமிக்க முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்கவின் கருத்து தொடர்பில், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பின்வருமாறு பதிலளித்தார்

கட்சி யாப்பின் ஊடாக செயற்குழு எவ்வாறு நியமிக்கப்படும் என அறிவோம். யாப்பை மீறி செயற்பட வேண்டாம் என்றே நாம் கூறுகின்றோம். சட்டப்பூர்வமான அதிகாரத்தை முறையாக பயன்படுத்துமாறே கூறுகின்றோம். அந்த உறுப்பினர் தற்போது ஒவ்வொரு விடயங்களை கூறுகின்றார். கட்சியை பிளவுபடுத்துவதற்காக செயற்படுகின்றார். அவர் இருந்த இடத்தை நாம் அறிவோம். செல்ல நினைக்கும் இடத்தையும் அறிவோம். அதனால் அது தொடர்பில் மீண்டும் பேச வேண்டியதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அப்பாவி மக்களுக்காக நாம் முன்நிற்கின்றோம்.