சுமந்திரன் இராஜினாமாக் கடிதத்தின் மிகுதியையும் எழுதும் நேரம் இது – சுரேஷ் சுட்டிக்காட்டு!

Suresh
Suresh

புதிய அரசமைப்பு நிறைவேறாது போனால் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்றுப் பதவி விலகுவேன் எனக் கூட்டமைப் பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார். அவ்வாறு இல்லாது அரசமைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருந்தாலும்கூட தனது கடமை முடிந்துவிட்டது எனத் தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் எனவும் தாமாகவே அவர் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது தனது இராஜினாமா கடிதத்தில் அரைவாசி எழுதிவிட்டார் எனவும் மிகுதியையே எழுத வேண்டியிருக்கிறது எனவும் பலசந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். இப்போது அவரது தனது இராஜினாமா கடிதத்தின் மிகுதியையும் எழுதிமுடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.இவ்வாறு தெரிவித்திருக்கின் றார் ஈ.பி.ஆர். எல்.எவ். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

தாம் இனப்பிரச்சினைக்கான தீர்வை எப்பாடுபட்டும் பெற்றுக் கொடுப்பார் எனக் கூறியவரால் தமிழ் மக்களுக்கு எதனையுமே பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

மக்களுக்கு ஆக்கபூர்வமான விடயங்கள் எதனையும் செய்யவில்லை. தற்போதைய அரசுஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்கும் வேலையை மட்டுமே செய்து வருகின்றார். இதனை தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டு செய்யவேண் டிய தேவையில்லை. அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டே செய்யலாம்.

எனவே சுமந்திரன் கூறியது போல, தனது ராஜினாமாக் கடிதத்தை முழுமைப்படுத்தி உடனடியாகப் பதவி விலகவேண்டும். அவர் அரசியலில் இருந்து விலகினாலும் வெறுமனே தமிழ் மக்களின் அரசியலில் இருந்து மட்டுமே ஒதுங்குவார் என நினைக்கின்றேன். அவர் ரணிலைப் பாதுகாக்கும் பணியை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு தொடரலாம். ரணிலைக் காப்பாற்றிக் கொண்டு அவருக்குச் சேவகம் செய்து வருவதால் இப்போது ஐக்கிய தேசியக் கடசிக்குள் ளும் அவருக்கு எதிர்ப்புக்கள் வந்துள்ளன.
ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவைப்பட்ட சுமந்திரன் தற்போது சஜித் பிரேமதாஸவின் அணியின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு பற்றி விசேட அமைச்சரவை ஊடாகத் தீர்மானிக்கவேண்டிய அவசரம் என்ன?அந்த அதிகாரம் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் இத்தனை காலமும் இருந்து விட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஏன் இவ்வாறான முயற்சியை எடுக்கவேண்டும்.
இதுகூடத் தனது எஜமான் ரணிலைப் பாதுகாத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சியே.

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார ஒழிப்பை அமைச்சரவைக்குக் கொண்டுவர முன்னின்று பணியாற்றியவர் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனே. ஜனாதிபதி,பிரதமர் என இரு தரப்பையும் சந்தித்துப் பெரும் முயற்சியை எடுத்திருந்தார். இவ்வாறான அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த சுமந்திரன் அரசமைப்பை முழுமைப்படுத்த முயற்சி எடுத்திருக்கின்றாரா?அரசியல் கைதிகளை விடுவிக்கச் செய்திருக்கின்றாரா? சுமந்திரன் பதவி விலகுவதற்கான காலம் வந்து விட்டது.

எனவே அவர் கூறியதுபோல தாமாகவே இராஜினாமா செய்ய வேண்டும் – என்றார்.