மஹிந்த, கோத்தபாய அடங்கிய பாரிய பதாகை- பாதிக்கப்பட்ட இளம் பெண்

lpp
lpp

அரசியல் கட்சிக்கு வைக்கும் அலங்கார வளைவுகளாலும் பதாகைகளாலும் பாதிக்கப்படும் சாதாரண பொதுமக்கள்

மஹரகம பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கும் வகையில் பொதுஜன பெரமுனவை சேர்ந்த முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் உபாலி கொடிகார, அவரது மனைவி முன்னாள் மஹரகம முதல்வரும், பொதுஜன பெரமுன அமைப்பாளருமான காந்தி கொடிகார ஆகியோர் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக மஹிந்த, கோத்தபாய அடங்கிய பாரிய பதாகையை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதாகை முறிந்து விழுந்தமையினால் பல வாகனங்கள் சேதமடைந்ததுடன் 27 வயதான சுலரி லக்னிமா பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். காலியைச் சேர்ந்த சுலரி வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த எட்டாம் திகதி மஹரகமவிலுள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சென்ற வேளையில் இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

குறித்த பெண்ணின் இடுப்பின் கீழ் பகுதி செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் நரம்பு மண்டலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலத்திற்கு வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெறும் அவல நிலைக்கு சுலரி லக்னிமா தள்ளப்பட்டுள்ளார்.

இதே போன்று இந்தியாவின் சென்னை, பள்ளிக்கரணை ரேடியல் சாலை அருகே சுபஸ்ரீ வந்து கொண்டிருந்தபோது பதாகை ஒன்று அறுந்து சுபஸ்ரீ மீது விழந்தது. நிலைதடுமாறிய சுபஸ்ரீ பின்னால் நெருக்கமாக வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரியில் சிக்குண்டு சுபஸ்ரீ எனும் பெண் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

அன்று இந்தியாவில் நிகழ்ந்தது இன்று இலங்கை. இவ்வாறான பதாகைகள் வைக்கப்படுவதன் காரணமாக சாதாரண பாமர மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறார்கள். அரசியல் கட்சிக்கு வைக்கும் அலங்கார வளைவுகளாலும் பதாகைகளாலும் பல மரணங்கள் நிகழ்ந்த பிறகும், இந்த வழக்கம் நீங்குவதாக இல்லை.