எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் யாழ்மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.03.2020) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே ஐங்கரநேசன் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுடன் இணைந்தே தேர்தலை எதிர்கொள்ளும் என்று பலரும் நினைத்திருந்தனர். நாங்களும் ஆரம்பத்தில் அதனை விரும்பியிருந்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று என்று அவர் அமைத்திருக்கும் கூட்டணி ஏமாற்றம் தருகின்ற கூட்டணியாக அமைந்திருப்பதாலேயே அந்தக்கூட்டணியில் இணைந்து எங்களால் பயணிக்க முடியவில்லை. நாங்கள் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடவுள்ளோம்.” என்றார்