நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம்!

20190923235953 IMG 5112
20190923235953 IMG 5112

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை 11 மணிக்கு முன்னனெடுக்கப்பட்டது .

தமிழர் மரபுரிமை பேரவையினரின் அழைப்பின் பேரில் இந்த கண்டன போராட்டம் இடம்பெற்றிருந்தது .

நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தது பொலிஸாரின் பூரண ஆதரவோடு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில், பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தமையை கண்டித்தும் , பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராகவும் சட்டதரணிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையை கண்டித்ததும் இந்த மாபெரும் கண்டன போராட்டம் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்து நீதிமன்ற வீதியூடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது .

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கைது செய் கைது செய் ஞானசார தேரரை கைதுசெய் , இலங்கை பொலிஸாரே தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமா ?? ஒழிக ஒழிக பௌத்த அராஜகம் ஒழிக, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , பௌத்தருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒரு சட்டமா? என்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை தங்கியவாறும் மாவட்ட செயலக வாயில் வரை சென்றனர்.

இறுதியில் தமிழர் மரபுரிமை பேரவையினர் மதத்தலைவர்கள் இணைந்து ஜனாதிபதிக்கும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் மகஜர் கையளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகஸ்தரிடம் மகஜர் கையளித்தனர் .

இந்த கண்டன போராட்டத்தில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் , சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், சிவில் அமைப்புகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட 2000 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களும் இளைஞர்களும் மாவட்ட செயலகம் முன்பாக ஞானசார தேரரின் புகைப்படத்துக்கு செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர் .

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக முல்லைத்தீவு வணிகர்கள் தமது கடைகளை அடைத்து பூரண ஆதரவை வெளியிட்டிருந்தனர் .