ஊரடங்குச் சட்டத்தால் முடங்குகின்றது வடக்கு

4 rw
4 rw

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய 8 மாவட்டங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு, நண்பகல் 12 மணி முதல் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் நண்பகல் 12 மணி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் ஏனைய 17 மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நண்பகல் 2 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்துடன், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துகளுக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு தமது வேலையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதுடன், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.