550 கொரோனா தொற்று நோயாளர் இலங்கை முழுவதும் நடமாடக்கூடும்

7 mobile
7 mobile

தற்போதுள்ள நிலைமைகளில் நுட்ப ரீதியான கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கையில் அடையாளம் காணப்படாத 550 கொரோனோ தொற்று நோயாளிகள் சமூகத்தில் நடமாடி வருவருவதற்கான சாத்தியங்கள் உண்டு என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தத் தொற்று நோயாளிகள் கிட்டத்தட்ட 19 ஆயிரம் பேருடன் தொடா்புக்களைக் கொண்டிருக்கலாம் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஊடரங்கு உத்தரவு நீடிக்கப்படாவிட்டால் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சூழ்நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25 முதல் ஏப்ரல் 7 வரை சமூக இடைவெளிகளை மேற்கொள்ளவில்லை என்றால், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார ஆலோசனைகள் பொதுமக்களால் பின்பற்றாவிட்டால் ஊரடங்கு மூலமான தனிமைப்படுத்தலே பாதிப்புக்களைத் தடுக்க ஒரே வழி எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.