மட்டக்களப்பில் 2 இலட்சம் பேருக்கு கொரோனா அபாயம்

1k
1k

“கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாமல் போகுமாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்படப் போவது உறுதி.”

– இவ்வாறு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் எம்.மதனழகன்.

எனவே, குறைந்தது 40 நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை மூடி வைத்திருந்தால் இந்த ஆபத்திலிருந்து தப்பிவிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஏப்ரல் மாதம் தாண்டும் போது காலநிலை மாறும். அப்போது பிரச்சினை பெரிதாகும் நிலைதான் காணப்படுகிறது.

அவ்வாறு பிரச்சினை பெரிதாகுமானால் நான் சிறியதொரு கணக்கைக் கூறுகின்றேன். அதன் மூலம் விபரீதம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

பாரிய உயிர்க்கொல்லி நோய் ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டை அழிக்கும்போது 45 – 75 வீதத்துக்கு அந்தப் பாதிப்பு இருக்கும். குறைந்த பட்சம் 40 வீதமானவர்கள் இந்தக் கொரோனா வைரஸ் தொற்று யோயினால் பாதிக்கப்படுவார்கள் என எடுத்துக் கொண்டால் ஆறு/ ஐந்து இலட்சம் மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்றார்கள். அப்படியாயின் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்படப்போவது உறுதி.

அந்த இரண்டு இலட்சத்தில் 80 வீதமானவர்கள் (ஒரு இலட்சத்து 40 ஆயிரம்) பேசாமல் இருப்பார்கள். எனினும், எஞ்சியிருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் வைத்தியசாலையில் விடுதி வசதி வேண்டும்.

இப்போது இருக்கும் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆயிரம் கட்டில்கள்தான் இருக்கின்றன. மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளையும் சேர்த்து எடுத்தாலும் இன்னொரு ஆயிரம் கட்டில்கள் கிடைக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் கட்டில்கள் கிடைக்கும்.

இந்த 40 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு நாம் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால், தற்போது எமது நிலவரத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 பேருக்குத்தான் அவசர சிகிச்சைப்  பிரிவில் இடம் கொடுக்க முடியும்” – என்றார்.