யாழ்ப்பாணத்தை ஐந்து வலயமாக்கி- கொரோனா தடுப்பு நடவடிக்கை

9 d 2
9 d 2

யாழ். மாவட்டத்தை ஐந்து வலயங்களாக பிரித்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அகில இலங்கை சைவ மகா சபை ஆலோசனை முன்வைத்துள்ளது.

நேற்று முன்தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது மக்கள் நடந்துகொண்ட விதத்தை தக்க பாடமாக எடுத்துக்கொண்டு இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். மாவட்டத்தை வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் மற்றும் யாழ்.மாநகரம் என ஐந்து வலயங்களாக பிரித்து ஐந்து வலயங்களுக்கும் தனித்தனியான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

இக்காலப்பகுதியில் ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு அத்தியாவசிய பணியாளர்களும் மருத்துவர்களும் செல்வதற்கு என போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியை வழங்கவேண்டும்.

யாழ். மாநகரத்திற்கு வீட்டுக்கு வீடு பொருட்களை விநியோகிக்கும் நடைமுறையை கொண்டுவரலாம். ஊரடங்கு ஒரு வாரத்திற்கு தொடரப்பட வேண்டும்.

ஊரடங்கு வேளையில் உரிய அனுமதிகளுடன் நகர்புற களஞ்சியங்களிலிருந்து கிராமங்கள் மற்றும் பிரதேச ரீதியான கடைகளுக்கு பொருட்கள் நகர்த்தப்பட்டு மிகக் குறைந்த எண்ணிக்கையானோருடன் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான நடைமுறையை பின்பற்றினால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விரைவான – முழமையான – பாதுகாப்பு பெற முடியும். இதைச் செயற்படுத்துமாறு அரச தரப்பையும் அதிகாரிகளையும் வலியுறுத்துகின்றோம். – என தெரிவிக்கப்பட்டுள்ளது.