வடக்கில் இன்னும் நிவாரணம் இல்லை – பட்டினி நிலை

7 gaja cyclone
7 gaja cyclone

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும் அன்றாடத் தொழிலாளர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடக்கப்பட்டவர்களுக்கும் அரசின் எந்தவொரு நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை.

நலன் விரும்பிகள் ஊடாக ஆங்காங்கே சிலருக்கு உதவிப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆகக் குறைந்தது 60 ஆயிரம் பேருக்கு உதவிகள் தேவை என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் அறிக்கையிடப்பட்டபோதும் இதுவரை அரசு எந்தவொரு நிதி உதவியோ, நிவாரண உதவியோ வழங்கவில்லை என்று மாவட்ட செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 20ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு பி.ப. 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு தடவைகள் கால வரையின்றி ஊடரங்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டள்ளது.

தொடர் ஊரடங்கு காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அன்றாடம் தொழில் செய்வோர் மற்றும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

சுமார் 76 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி பெறுகின்றனர். அதனை விட 11 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி உதவி தேவை. இவர்களிருந்து உடனடித் தேவையுள்ளோராக 60 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான நிவாரணம் வழங்க 400 மில்லியன் ரூபா தேவை என்று மாவட்ட செயலகத்தால், தேசிய வறுமை ஒழிப்புச் செயலணி மற்றும் ஜனாதிபதி விசேட செயலணிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை.

மேலும் இடர்முகாமைத்துவ அமைச்சால் மாவட்டத்துக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி நிவாரண உதவிக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தபோதும் அதற்கு அரச உயர்மட்டங்கள் பச்சைக்கொடி காட்டவில்லை.

அந்த நிதியை நிவாரணத்துக்குச் செலவிட முடியாது என்று அறிவித்துள்ளன.

இதனைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியபோது ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்ட போதிலும் அந்த நிதியும் இதுவரை மாவட்ட செயலகத்துக்குக் கிடைக்கவில்லை.

இதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் எந்தவொரு மாவட்டத்துக்கும் இதுவரை அரசின் எந்தவொரு நிதி உதவியும் கிடைக்கவில்லை.