கோத்தாவுக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு எனத் தகவல்!

gota
gota

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாது பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித்சியாலம்பிட்டிய தாங்கள் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவையே ஆதரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமான வேட்பாளர் என்பதால் இந்த முடிவை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் நேற்றிரவு இடம்பெறவிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கட்சியின் மத்திய குழு பொதுஜனபெரமுனவின் வேட்பாளரிற்கு ஆதரவளிக்கவேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் என குறிப்பிட்டார் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் நான்கு தெரிவுகளே உள்ளன, நடுநிலை வகிப்பது, சொந்தவேட்பாளரை களமிறக்குவது, ஐக்கியதேசிய கட்சி அல்லது பொதுஜனபெரமுனவிற்கு ஆதரவளிப்பது ஆகியனவையே அவை என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியே எனினும் அவர் போட்டியிட விரும்பவில்லை மேலும் சுதந்திரகட்சியால் வெல்ல முடியாது என்பதும் வெளிப்படை என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டால் அது முற்போக்கு எண்ணம் கொண்ட வாக்காளர்களின் ஆதரவை பிரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் சுதந்திரக்கட்சி எந்த சூழ்நிலையிலும் ஐக்கியதேசிய கட்சி வேட்பாளரை ஆதரிக்கமுடியாது எங்களிற்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு உள்ள இறுதி தெரிவையே நாங்கள் தெரிவு செய்கின்றோம், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பதே அது எனவும் முன்னாள் அமைச்சர் ரஞ்சித்சியாலம்பிட்டிய தெரிவித்தார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.