எழுத்துமூல உறுதிமொழியின் பின்னரே ஆதரவு என்கிறது கூட்டமைப்பு!

cvk001
cvk001

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவோம் என எழுத்து மூல உறுதிமொழியை வழங்கவேண்டும். அவ்வாறான எழுத்து மூல உறுதிமொழி வழங்கத் தயங்கினால் அல்லது தவறினால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் பகிஷ்கரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு தேர்தலைப் பகிஷ்கரிப்பது எங்களுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. இதனை நாங்கள் கடந்த 2005 தேர்தலிலும் செய்து காட்டியிருக்கின்றோம்.’ இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம்.

இந்தத் தேர்தல் தொடர்பில் இரண்டொரு பேருடன் கலந்துரை யாடி முடிவுவை எடுக்கலாம் என சிலர் கருதுவது தவறு என்றும் தமிழரசுக் கட்சிக்குள்ளேயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும் கலந் துரையாடியே முடிவுகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் எங்களது நிலைப்பாடு பற்றி கேட்கப்படுகின்றது. எங்கள் மத்தியிலும் ஒரு சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தல் தொடர்பில் நாங்கள் அதாவது தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழுவில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. அந்த நிலைப்பாடு இன்றும் வலுவானதாக இருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

அதாவது குறிப்பிட்ட எல்லா வேட்பாளர்களுடனும் அது யாராக இருந்தாலும் நாங்கள் பேசவேண்டும். அவர்கள் எங்களோடு பேச வேண்டும். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, காணி, அரசியல் கைதிகள், காணாமற்போனோர், அகதிகள் புனர்வாழ்வு, இடம் பெயர்ந்தோர் மீளக்குடியமர்வு, பெளத்த மேலாதிக்கம் என்பன தொடர்பில் அவர்களுடைய நிலைப்பாடு என்ன என அறிய வேண்டும்.

இந்த விடயத்தில் பொதுவாகக் கருத்துச் சொல்லவேண்டிய தேவையில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லியாகவேண்டும். இப்போது நாங்கள் ஏதோ ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிக்கிறோம் என்ற கருத்து பொதுவாக இருக்கின்றது.

அது தவறு என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இப்போது வடக்கு – கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தல் பிரசாரப் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துக் கொண்டிருக்கிறார் எனவும் அவர் இதில் செல்வாக்குச் செலுத்தலாம் என்றும் கருத்துச் சொல்கிறார்கள். அது ஒருவேளை அவரைப் பொறுத்த வரை உண்மையாக இருக்கலாம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிலும் பல குறைபாடுகள் இருக்கின்றன.

கடந்த நான்கு வருடத்திலே அவர்களது செயற்பாடுகளில் தொய்வுகள், நாங்கள் ஏமாந்து போன நிலைகள் நிறைய உள்ளன. அவரை நம்பி நாங்கள் நிற்போம் என்று சொல்லிக் கொண்டிருப்பதும் தவறானது. ஆகவே தெளிவான நிலைப்பாட்டுக்குள் ஐக்கிய தேசியக் கட்சி வர வேண்டும். ஜே.வி.பி. தங்கள் கருத்தைச் சொல்லாம் அதை நாங்கள் பரிசீலிக்கலாம். கோட்டபாய ராஐபக்வும் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

எது எவ்வாறு இருந்தாலும் இந்த முறை அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை எழுத்து மூலமாக வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆகவே அந்த எழுத்து மூல உடன்பாட்டைப் பகிரங்கப் படுத்தவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டு இருக்கின்றது. தனியே இரண்டொரு பேருடன் பேசி முடித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைப்பது தவறு. இம்முறை வேட்பாளர்கள் ஒரு திருப்தியான நிலைப்பாட் டுக்கு வரவில்லை என்றால் நாங்கள் ஒரே சமயத்தில் வாக்களிப் பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிலையும் வரலாம். இது புதிய விடயமல்ல.

கடந்த 2005 இலும் இதைத் தான் நாங்கள் செய்திருந்தோம் அதாவது இந்தத் தேர்தலில் வாக்களிக்காமலும் விடலாம். பகிஷ்கரிக்கலாம்.
ஆனால் ஜனநாயகத்தில் எங்கள் வாக்குரிமையை பிரயோகிக்கவேண்டு மென்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக எங்கள் வாக்குரிமைக்கான ஏற்புடமையை அவர்கள் தராவிட்டால் நாங்கள் ஒதுங்கி நின்று பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதன் பின்னர் வந்தவர்களுடன் நாங்கள் பேசுவதற்கான நிலைப்பாட்டையும் உருவாக்கக் கூடும். இந்தச் சாத்தியத்தையும்புறந்தள்ளிவிட முடியாது என்பதையும் நான் இப்போது வலியுறுத்துகிறேன். சில நேரம் இவர்களின் ஒப்புதல் இல்லை. அவர்கள் தாங்கள் சிங்கள தேசத்திற்காகத்தான் செயற்படப் போகிறோம் என்றால் நாங்கள் ஒதுங்கி நிற்கின்ற சூழலை அவர்கள் தான் உருவாக்குவார்கள். நாங்கள் வாக்களிக்கத்தயாராகத் தான் இருக்கிறோம் என்றார்.