ரணில் சொல்லே (சு)மந்திரம் – ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கிறது கூட்டமைப்பு?

Sumanthiran Ranil
Sumanthiran Ranil

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதற்கான ஆலோசனைகள் தமிழரசுக் கட்சி மட்டத்தில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கலாம் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் போட்டியிடவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் விரும்பினார். அண்மையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழில் கலந்துகொண்ட கூட்டமொன்றில் சுமந்திரன் தனது விருப்பத்தைப் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார். ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் ஆதரவுச் சக்திகளின் கை மேலொங்கியுள்ளதால் சுமந்திரனின் ஆசை நிராசையாகிவிட்டது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்றால் தனது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என அஞ்சுகிறார். தனது அரசியல் வாழ்வு நீடிக்கவேண்டும் என்றால் சஜித் தோற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதற்காக தன் நம்பிக்கைக்குரிய சுமந்திரனை வைத்து ஆட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார் என்கின்றன கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள்.

‘எழுத்துமூல உத்தரவாதம் தந்தாலே சஜித்துக்கு ஆதரவு’ என்பதே கூட்டமைப்பின் தற்போதைய நிபந்தனையாக இருக்கிறது.  அந்த எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கினால், கோத்தபாய தரப்பு அதைக்காரணம் காட்டி சஜித்துக்கு  எதிரான பிரச்சாரங்களை தென்னிலங்கையில் முன்னெடுப்பார்கள். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சிங்கள மக்களின் ஆதரவை இழந்து சஜித் ஜனாதிபதித் தேர்தலில் தோற்பது உறுதி.  அப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையை சஜித் ஏற்கமறுத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லும்.  தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால் அதுவும் சஜித்துக்கு பாதகமாகவே அமையும். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தோற்பார். இதே ரணில் விக்கிரமசிங்கவின் கணக்காக இருக்கிறது.  

இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மைத்திரி-ரணில் தலைமையிலான ‘இதயத்தால் இணைந்துகொண்ட நல்லாட்சியில்’  தமிழ் மக்களிற்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ‘அரசியல் கைதிகள் விடுதலை’ போன்ற அவசரப் பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காணப்படவில்லை. இதன் பிரதிபலிப்பு கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் எதிரொலித்தது. கூட்டமைப்பின் மேல் உள்ள மக்களின் அதிருப்தியை திசைதிருப்ப  தேர்தல் புறக்கணிப்பு எனும் ஆயுதம் உபயோகமாக இருக்கும் என கூட்டமைப்பு நம்புகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவு எடுத்தாலும் அது ரணில் மற்றும் கூட்டமைப்பின் அரசியல் பாதுகாப்பை  உறுதி செய்வதற்காகவே இருக்கும் என நம்பலாம்.