தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 44 பேருக்கு ஆசிரியர் நியமனம்

appoinment
appoinment

வேறு மாவட்டங்களுக்கு ஆசிரிய நியமனம் பெற்றிருந்த ஊவா மாகாண டிப்ளோமா பட்டதாரி ஆசிரியர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் ஊவா மாகாணத்திலேயே நியமனம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 44 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் குறித்த விபரங்கள் வழங்கப்படாமையினால், குறித்த ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு நியமிக்கப்பட்டதாக, கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

அவர்களை உடனடியாக ஊவா மாகாண பாடசாலைகளுக்கே நியமிக்க நடவடிக்கை எடுத்த போதும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தடங்கல் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில் கல்வி அமைச்சின் மேன்முறையீட்டுக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், அவர்களது நியமனங்களை மாற்றி வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் குறித்த டிப்ளோமாதாரிகளுக்கான நியமனங்கள் ஊவா மாகாணத்திலேயே வழங்கப்படவுள்ளன.