பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைகிறது

harisan
harisan

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்காக சுங்கவரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 39 ரூபாவினால் குறைக்கப்பட்டிருப்பதாக வாழ்க்கைச் செலவு குழுவின் தலைவரும் விவசாய, நீர்பாசனம், கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக நுகர்வோரான பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக வாழ்க்கை செலவு குழுவின் மூலம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான சுங்கவரி 40.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை தாக்கத்தின் காரணமாக அங்கு உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காய ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபா தொடக்கம் 300 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நுகர்வோரான பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான சுங்கவரியை இன்று நள்ளிரவு முதல் 39 ரூபாவினால் குறைப்பதற்கு வாழ்க்கை செலவு குழு தீர்மானித்துள்ளது.

விவசாய திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைவாக தற்பொழுது உள்ளுர் பெரிய வெங்காயத்தின் அறுவடை 75 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பி.ஹெரிசன் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். சுங்கவரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து சந்தையில் தற்பொழுது பெரிய வெங்காயத்தின் விலை 50 ரூபா தொடக்கம் 70 ரூபாவினால் குறைவடையும் என்று வாழ்க்கை செலவு குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எகிப்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு தற்பொழுது சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக வாழ்க்கை செலவு குழு அறிவித்துள்ளது.