நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் தீர்வுகாண முடியும்

7 ed
7 ed

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைப் பயன்படுத்தி அரசியலமைப்பை முன்னிறுத்தும் நீதிமன்றத்தைப் புறந்தள்ளி நிறைவேற்றதிகாரம் தன்னிச்சையாக வேறு பாதையில் பயணிக்க முயற்சிக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாகச் சாடியிருக்கிறது.


இது குறித்து  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று சனிக்கிழமை 11 வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பொதுத்தேர்தலை நடாத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாபதியின் கவனத்திற்கு உட்படுத்துமாறு ஜனாபதியினன் செயலாளருக்கு அனுப்பிவைத்த கடிதத்திற்கு அவரால் அளிக்கப்பட்டுள்ள பதில் தொடர்பில் நாட்டின் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும்.


தேர்தல் தொடர்பில் இனிவரும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தனது கடிதத்தின் ஊடாகப் பரிந்துரைத்த போதிலும் அதனை ஜனாதிபதி மறுத்திருக்கிறார்.  


இதன் மூலம் எத்தகைய விலையைச் செலுத்தியேனும், பொதுத்தேர்தலை நடாத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் கனவிலேயே அரசாங்கம் இருக்கிறது என்ற விடயம் வெளிப்படுகிறது. இல்லாவிடில் தேர்தல் தொடர்பான சிக்கலுக்கு மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதன் மூலம் தீர்வுகாண முடியும். எனினும் அதற்கு ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தயார் நிலையில் இல்லை.


அரசாங்கம் தமக்கு ஏற்புடைய விதத்தில் அரசியலமைப்பிற்குப் பொருள்கோடல் செய்வதனூடாக ஒரு ஏகாதிபத்திய ஆட்சியையே நிறுவ முயற்சிக்கிறது.

தமக்குச் சாதகமான ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் ஊடாக நாட்டிற்கு பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை  என்ற தொனியிலான பிரசாரத்தையும் அரசு முன்னெடுக்கிறது.


கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைப் பயன்படுத்தி அரசியலமைப்பை முன்னிறுத்தும் நீதிமன்றத்தைப் புறந்தள்ளி நிறைவேற்றதிகாரம் தன்னிச்சையாக வேறு பாதையில் பயணிக்க முயற்சிக்கிறது என்பதையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி செயலாளருக்கு வழங்கிய பதிலில் இருந்து அறியமுடிகிறது.

இதனைப் புரிந்துகொண்டு, ஜனநாயகத்தை முன்னிறுத்த அனைவரும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும்.