கோட்டாவின் முடிவுக்கு எதிராக 3 அடிப்படை உரிமை மீறல் மனு!

6 ped
6 ped

தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் 8 அப்பாவித் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவச் சார்ஜண்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்காவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமையை ஆட்சேபித்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நேற்றுமுன்தினம் பகல் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உயர்நீதிமன்றத்தில் efiling மூலம் வழக்குத் தாக்கல் செய்தார். அதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை அம்பிகா சற்குணநாதனும் தாமும் ஒரு மனுதாராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

அம்பிகா சற்குணநாதன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறுப்பினராக இருந்தபோது சிறைக் கைதிகளின் விடுதலை, ஒழுங்குகள் பற்றிய விடயங்களைக் கையாண்டவர்.

அந்தவகையில் இவ்விடயங்களில் ஆழ்ந்த பாண்டித்தியம் பெற்றவர் என்ற முறையில் இவ்விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதேவேளை, மாற்றுக் கொள்கைகளுக்கான மையமும் ஒரு வழக்கை நேற்று முற்பகல் தாக்கல் செய்துள்ளது.

இந்த இருவரினதும் வழக்கை பாவேந்திரா சட்ட நிறுவனம் மன்றில் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.