தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு பத்தாயிரம் பேர்!

paffrel
paffrel

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் பேர்வரை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு குறித்த அமைப்பிலிருந்து 35 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர் என்றும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கு முன்னர், தேர்தல் இடம்பெறும் தினத்தன்று, தேர்தலுக்குப் பின்னர் என்ற மூன்று அடிப்படைகளின் எமது கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.

அதேபோன்று நேரடி வாக்குப்பதிவின் போதும், தபால்மூல வாக்குப்பதிவின் போதும் கண்காணிப்பு இடம்பெறும் என்பதுடன் நடமாடும் கண்காணிப்பு மற்றும் நீண்டகால கண்காணிப்பு என்பவற்றுக்கும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.