தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

stf
stf

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய தாக்குதல் எச்சரிக்கைக் கடிதத்தையடுத்து முப்படையினரும் பொலிஸாரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றின் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

இந்தச் செய்தியை சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

இலங்கையில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் மீது மற்றுமொரு குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் எனப் புதிய எச்சரிக்கை கிடைத்துள்ளது.

எனவே, பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்துமாறு பொலிஸாருக்கும் படையினருக்கும் உடன் உத்தரவு பிறப்பியுங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்குப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவசர கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இதேவேளை, தாக்குதல் குறித்த புதிய தகவலை அரச புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்துள்ளனர். இதன் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் இந்தத் தாக்குதல் எச்சரிக்கையை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடற்படை, விமானப்படையினருக்கும் தாக்குதல் எச்சரிக்கை குறித்து தெளிவூட்டப் பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள படை அதிகாரிகள் பலவிதமான பாதுகாப்பு நடவடிக் கைகளில் பொலிஸாருக்கு முப் படையினர் உதவுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்கத் தேவாலயங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, இந்தத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குப் பொலிஸார் விஜயம் மேற்கொண்டு அங்கு தங்கியிருப்பவர்கள் குறித்த விபரங்களையும் பெறத்தொடங்கி யுள்ளனர்.

மேலும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் எவராவது தென்பட்டால் அது குறித்து அறி விக்குமாறும் கோரியுள்ளனர். வன்முறைகளைத் திட்டமிடுபவர்கள் யார் என்பது தங்களுக்குத் தெரியும் எனக்குறிப்பிட்டுள்ள பொலிஸார் நிலைமைய உன்னிப் பாக அவதானிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் – என்றுள்ளது.